திருச்சி:-தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கி
வருகின்றனர்.கடந்த, 2012ல் மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்காக கம்யூட்டர், தையல், உடற்பயிற்சி ஆகிய பிரிவுகளுக்கு, 16,546 சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலில், 5,000 ரூபாயாக இருந்த மாத ஊதியம், பின், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.


இவர்கள், வாரத்தில் மூன்று, அரை நாட்கள் மட்டும் பணியாற்ற வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. ஆனால், அவர்களை வாரத்தில் மூன்று முழு நாட்களும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி பணியாற்ற வைக்கின்றனர்.இதுதவிர, பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளையும் சிறப்பு ஆசிரியர்களையே செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் வழக்கமான பள்ளி ஆசிரியர்களுக்காக, கல்வித்துறை நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு, பள்ளியில் இருந்து சென்றதாக ஆள் கணக்கு காட்டவும், சிறப்பு ஆசிரியர்கள்
அனுப்பப்படுகின்றனர். பள்ளிக்கு புத்தகம் வாங்குவது, சீருடைகள் வாங்குவது என மற்ற பணிகளுக்கும் சிறப்பு ஆசிரியர்களே அனுப்பப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு தனியாக போக்குவரத்து படி ஏதும் கொடுக்கப்படுவதில்லை.

தமிழக அரசு, தங்களை என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில், தலைமை ஆசிரியர்கள், தங்களை கொத்தடிமை போல் வேலை வாங்குவதை சகித்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஆகவே, அரசு விதிகளின்படி வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் தங்களுக்கு பணி வழங்க, கல்வித்துறை கண்டிப்பாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.