சிவகங்கை: பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டில் குற்றவாளிகள் கண்டு பிடிக்காததால் தலைமை ஆசிரியர்கள் 100 பேர், பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2011--12 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 5.40 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் பல இடங்களில் 

மாணவர்களுக்கு கொடுப்பதற்காக பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த 'லேப்டாப்' கள் திருடப்பட்டன.'அவற்றை பாதுகாக்க தவறிய பள்ளி தலைமை ஆசிரியர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டது. சில இடங்களில் மட்டுமே 'லேப் டாப்'கள் மீட்கப்பட்டன.வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ௧௦௦ பேருக்கு பணப்பலன் கிடைக்கவில்லை. இதனால் வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைந்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாததால் தான் திருட்டு நடக்கிறது. இதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன் நிறுத்தி வைக்கப் படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.