ராமநாதபுரம் அரண்மனை முன்பு, ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதிய மாற்றம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவதற்கு முன்னதாக, 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சேகர், முருகேசன், ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி, மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தங்களின் அடுத்தகட்ட போராட்டமாக, ஆகஸ்ட் 5-ல் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
அதேபோல, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.