சென்னை: 'தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, பல வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: தமிழக அரசு சார்பில், 1997 முதல், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது; 2005 வரை, பல்வேறு மையங்களில் நடந்தன. பின், சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. 2016 முதல், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், இன்ஜி., கவுன்சிலிங்கில் மாணவர்கள், பெற்றோருக்கான அலைச்சலை தவிர்க்க, அடுத்த கல்வி ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு நடத்தப்படுவது போல, ஆன்லைனில் தங்கள் விருப்ப பாடப்பிரிவை மாணவர்கள் பதிவு செய்து, இட ஒதுக்கீடு பெறலாம். இதற்கு தேவையான உதவி மையங்களை, தமிழக அரசு அமைக்கும்.
மருத்துவம், வேளாண்மை போன்ற இதர கவுன்சிலிங்கால் இடங்கள் காலியாகி, அவை வீணாகாமல் தடுக்க, புதிய முறை கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, ஆன்லைன் கவுன்சிலிங்கில் சேர்ந்த மாணவர்கள், திடீரென விட்டுச்சென்றால், அந்த இடங்கள் தானாகவே, காலி பட்டியலுக்குள் வரும். அந்த இடத்துக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அனுமதி உட்பட, சட்டரீதியான அனைத்து அனுமதியும் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.