புதுடில்லி : மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள 85 சதவீதம் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் 85 சதவீதம் இடஒதுக்கீடு நீட் தேர்வு முறையை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தது.நீட் தேர்வு முறையை பாதிக்கும் வகையில், தமிழக அரசின் அரசாணை இல்லை எனவும் கூறி உள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகும்படியும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.