'இ - சேவை' மையங்கள் மற்றும், 'ஆதார்' பதிவு மையங் களில், கண்காணிப்பு 
கேமராக்கள் பொருத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களில், 'இ - சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், ஜாதிச் சான்று உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட சேவைகள், குறைந்த கட்டணத்தில், விரைவாக வழங்கப்படுகின்றன.

இதே போல், ஆதார் பட்டியலில், பெயர் சேர்க்கை மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, 303 நிரந்தர சேர்க்கை மையங் களை, கேபிள், 'டிவி' நிறுவனம் நடத்தி வருகிறது. 
இந்நிலையில், 'இ - சேவை' மையங்கள், ஆதார் சேர்க்கை மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணித்து, சேவையின் தரத்தை கூட்டவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், அங்கு, 
'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த, அரசு கேபிள் நிறுவன இயக்குனர் குழுவில், 'இ - சேவை' மையங்கள் மற்றும் ஆதார் மையங்களில், 1,000 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை, எழும்பூர், மார்ஷல் தெருவில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. அங்கு, 10 ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.