சென்னை: 'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்காவும், 10ம் வகுப்பு முடித்து, நேரடியாக தனித்தேர்வாக எழுதவும், செப்., இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்காதவர்கள், 'தத்கல்' என்ற சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில், நாளை முதல், இரண்டு நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
கூடுதல் விபரங்களை, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம். சேவை மைய முகவரிகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.