''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

கிருஷ்ணகிரியில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங் கோட்டையன் பேசிய தாவது:
மலை கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, 7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்.
மத்திய அரசின் எந்த ஒரு போட்டி தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
சென்னையை தலைமை யிடமாக கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறந்தகல்வியாளர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இதை, இணைய தளம் வழியாக மாணவர்கள் கற்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், அடுத்த மாதம், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது,'' என்றார்.