"விளையாடும்  போது நிகழ்ந்தது-  ஆசிரியர் மறுப்பு"   
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்- சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். இந்த மாணவனைக் குப்புசாமி என்ற ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது.


இதுபற்றி விஸ்வேஸ்வரனின் அம்மா சின்ராஜிடம் கேட்டபோது, ''எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பெயர் விஸ்வேஸ்வரன் வயது 12. சின்ன மகன் பரணிதரன் வயது 5.

நாங்க கூலித் தொழில் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மூத்த மகன் விஸ்வேஸ்வரன் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். குடும்ப வறுமையின் நிமித்தம் அங்கிருக்கும் அரசு விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாணவர்கள் மதியம் 2 மணிக்கு ஸ்கூல் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். 

அப்போது அந்தப்  பள்ளி ஆசிரியர் குப்புசாமி வந்து மாணவர்களோடு கிரிக்கெட் விளையாடியதாகவும், பந்து அடிக்கும்போது பேட் பிடுங்கி வந்து என் மகன் விஸ்வேஸ்வரன் தலையில் பட்டு கீழே விழுந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். மேலும், சிலரோ ஆசிரியர் பேட்டில் அடித்ததால் வாயில் ரத்தம் வந்து கீழே விழுந்ததாகச் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை.

நேற்று இரவு 8 மணிக்குப் போன் பண்ணி உங்க பையன் சீரியஸ் கண்டிஷனில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக போனில் சொன்னார்கள். தற்போது வரை நேரில் சந்தித்து நடந்தவற்றைப் யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை. உண்மையில் எதார்த்தமாக நடந்திருந்தால் எங்களிடம் சொல்லியிருக்க வேண்டியதுதானே.

இவர்கள் சொல்லாததால் எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அடித்ததால்தான் பையனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு நீதி கிடைக்காமல் விட மாட்டோம். படிக்க அனுப்பிய பையன் அநாதையாக மருத்துவமனையில் கிடக்கிறான். ஏழைகள் என்றால் கிள்ளுக் கீரையா? தற்போது மருத்துவர்கள் மூளைச்சாவு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் பையன் நல்லபடியா திரும்பி வர வேண்டும். என் பையனுக்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது'' என்றார்.

ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த தமிழரசன், ''நேற்று நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு இந்தப் பள்ளியிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் என அனைவரும் போயிருக்கிறார்கள். விடுதியில் படிக்கும் மாணவர்கள்கூட சென்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்குப் போகாத சிலரை ஆசிரியர் அடித்திருக்கிறார்.

அவர் அடித்ததில் பையனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் வருகிறது. இன்னும் சரியான தகவல் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சரியான தகவல் கிடைத்ததும் இந்தப் பிரச்னையை சும்மாவிட மாட்டோம். அந்தக் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்'' என்றார்.