கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர அதிமுக அரசு முயற்சி செய்யும் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

இதுகுறித்து கரூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது:
தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்று அதிமுகவை உருவாக்கினார் எம்ஜிஆர். மாபெரும் தலைவர்களின் கொள்கைப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாநில உரிமைகளை நிலைநிறுத்தி தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி மாநில உரிமைகளைக் காத்து ஆட்சி நடத்தினார்.
அவரது வழியில் எடப்பாடி அரசும் செயல்பட்டு ஐந்தாண்டு கால ஆட்சியைப் நிறைவு செய்யும். ஜெயலலிதாவின் விருப்பப்படி இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை அதிமுக ஆளும். இதுவே மக்களின் விருப்பமும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் எந்தத் தொண்டனும் மாற்றுக்கட்சிக்குச் செல்லவில்லை. 
நவோதயா பள்ளிகள் திட்டத்தை ஜெயலலிதா ஏற்கவில்லை. 2016 ஜூலையில் புதுதில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமெனக் குரல் கொடுத்தவர் அவர். நாங்களும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளோம்.
ஒருசில இடங்களில் அத்தகைய பள்ளிகளைத் திறப்பதால் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியாது. தமிழக அரசு கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நவோதயா பள்ளி திட்டத்துக்கு செலவழிக்கும் தொகையை மாநில அரசுக்கு வழங்கினால் கல்வித் தரத்தை மேம்படுத்துவோம். 
பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர அதிமுக அரசு முயற்சி செய்யும். அதற்காக மாநிலங்களுக்குள் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்போம். தினகரன் என்னை கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கியதாகக் கூறுவது பற்றி எனக்குத் தெரியாது என்றார் அவர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.