சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை விடுத்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசுப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. 
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016 பிப்ரவரியில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அப்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வல்லுநர் குழு அமைப்பது உள்ளிட்ட 11 அறிவிப்புகளை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி எண்.110 -இன் கீழ் வெளியிட்டதால் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால், அதன் பிறகு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மீண்டும் போரட்ட களத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சட்டப்பேரவையில் அறிவித்தபடி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.