சென்னை:தமிழகத்தில் செயல்பட்டு வரும், 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை, 210 கோடி ரூபாயில் மேம்படுத்த, அரசு நிர்வாகஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், நுாலகம், கழிப்பறை,ஆசிரியர் ஓய்வறை, மாநாட்டு அறை, கூட்டரங்கம் போன்ற உட்கட்டமைப்பு வசதி, 210 கோடி ரூபாய் செலவில், இரு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.புதிய கட்டடங்கள், 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம்' என, அழைக்கப்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டு, 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

ஆறு ஆண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 961 கூடுதல் பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு உள்ளன. இப்பாடப் பிரிவுகளுக்கு, வகுப்பறைகள் கட்டப்பட வில்லை.எனவே, 68 அரசு கல்லுாரிகளில், 862 வகுப்பறை கட்டடங்கள், 172 ஆய்வக கட்டடங்கள் கட்ட, 210 கோடி ரூபாய்க்கு, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில், 24 கல்லுாரிகளில், 104.61 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்படும். மீதி கல்லுாரிகளுக்கு, அடுத்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப் படும்.