செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வரித் தாக்கலில் அக்டோபர் 23ஆம் தேதி வரையில் ரூ.92,150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜி.எஸ்.டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் (ஜூலை) ரூ.92,283 கோடி வசூலானது. இரண்டாவது மாதமான ஆகஸ்ட்டில் ரூ.90,669 கோடி வசூலானது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வரித் தாக்கலில் அக்டோபர் 23ஆம் தேதி வரையில் ரூ.92,150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.14,402 கோடி மத்திய ஜி.எஸ்.டி. மூலமும், ரூ.21,172 கோடி மாநில ஜி.எஸ்.டி. மூலமும், ரூ.48,948 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலமும் கிடைத்துள்ளது.

மேலும், இழப்பீட்டு வரி வருவாய் ரூ.7,988 கோடி கிடைத்துள்ளது. இதில் இறக்குமதி வரி ரூ.722 கோடியாகும். ஜூலை மாதத்தில் 64.42 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 68.20 லட்சம் பேரும் வரித் தக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி.ஆர். 3பி. ரிட்டன் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 42.91 லட்சமாக உள்ளது. ஜி.எஸ்.டி.ஆர். 3பி. ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.