தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊதியக்குழு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்திய 6 வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது.
இதனை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய கல்வித் துறை செயலர் ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தும் போது, கடந்த ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியக்குறைபாடு முற்றிலும் களையப்படும் என உறுதி அளித்தார்.மேலும் 2011 தேர்தல் பரப்புரையிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஊதியக் குழு முரண்பாடுகள் களையப்படும் என்றார். ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 7ஆவது ஊதியக்குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் நீக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்தில் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்பட்டு, இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ஊதிய இழப்பை சரி செய்து 7ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி துணை அரசாணையை வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.