கே.வி.,KV,பள்ளி,தரவரிசை,அரசு,அதிரடி,முடிவு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பள்ளியின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், பள்ளி நிர்வாகம் உட்பட ஏழு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. மதிப்பெண்களின் அடிப்படையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நான்கு வகைகளாக தரம் பிரிக்கப்பட உள்ளன. அதனடிப்படையில், இந்தப் பள்ளிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.