உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 அரும்பாக்கம் ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருலோசன குமாரி. இவரது வீட்டின் முன்பு மதி என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அரசியல் கட்சியின் பேனரை வைத்துள்ளார். இதனால், திருலோசன குமாரியின் வீடு மறைக்கப்பட்டது. இதையடுத்து, பேனரை அகற்றுமாறு திருலோசன குமாரி மதியிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த பேனர் அகற்றப்படவில்லை. மாறாக அவரை மதி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ஏப்ரல் 13ம் தேதி திருலோசன குமாரி சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 8வது மண்டல உதவி ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதில் தனது வீட்டுக்குள் செல்ல முடியாத வகையில் பேனரை வைத்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மே 30ம் தேதி மீண்டும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பினார். 

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலால் அந்த பேனர் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் மதி பேனரை வைத்துள்ளார். இதையடுத்து, அரும்பாக்கம் போலீசில் திருலோசன குமாரி புகார் கொடுத்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மனுதாரரைக் கூப்பிட்டு விஷயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் நல்லது. இல்லையென்றால் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். 

இதையடுத்து, திருலோசன குமாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆஜராகி, மனுதாரரிடம் தான் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதாக கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான கோபாலகிருஷ்ணன் வாதிடும்போது, மனுதாரரின் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது. இனிமேல் அந்த இடத்தில் வீட்டின் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் எந்த அரசியல் கட்சியின் பேனர்களும் வைக்கப்படாது என்றும் அந்த வீட்டு சுவரில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் எழுதப்படாது என்று உறுதியளித்துள்ளனர். 

இந்த வழக்கில் மனுதாரர் புகார் கூறியுள்ள மதி என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அப்படி ஒருவரும் இல்லை என்று நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. மேலும், அகற்றப்படாத பேனர்கள், கட்டவுட்டுகள் இருந்தால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், 8வது மண்டல உதவி ஆணையரும் உறுதியளித்துள்ளனர். 

அப்படி பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பெயரை சம்மந்தப்பட்ட போலீசில் அதிகாரிகள் தரவேண்டும். அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்த அறிவுறுத்தல்களுடன் இந்த வழக்கு   முடித்து வைக்கப்படுகிறது. இருந்தபோதிலும், தூய்மையை கடைபிடித்து தமிழகம் முழுவதும் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. குடியிருப்பு பகுதிகள், வீடுகள், கட்டிடங்களில் தேவையில்லாமல் சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை எழுதக்கூடாது. 

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து யூனியன்களில் சுற்றுச்சூழலையும், தூய்மையையும் காப்போம் என்று தலைமைச் செயலாளர் உறுதியளிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். 

உயிரோடு இருக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படங்கள், படங்களுடன் பேனர்கள், சைன்போர்டுகள், கட்அவுட்டுகளை வைக்கக்கூடாது. மேலும், பேனர்களை ஸ்பான்சர் செய்பவர்களின் புகைப்படமும் இடம்பெறக்கூடாது. இந்த உத்தரவை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


தமிழகம் முழுவதும் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இதுதொடர்பான அரசாணையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். உயிரோடு இருக்கும் அரசியல் கட்சி  பிரமுகர்களின் புகைப்படங்கள், படங்களுடன் பேனர்கள், சைன்போர்டுகள்,  கட்அவுட்டுகளை வைக்கக்கூடாது. மேலும், பேனர்களை ஸ்பான்சர் செய்பவர்களின்  புகைப்படமும் இடம்பெறக்கூடாது.