Sunday, October 22, 2017

*டெங்கு காய்ச்சலில் என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை குழப்பம்?* _கேள்வி பதில்._

*_டாக்டர். அ. அருண்குமார், MD(Pediatrics),_*
*_குழந்தை நல சிறப்பு மருத்துவர்,_*
*_ஈரோடு._*

(கொஞ்சம் நீளமான மெசேஜ் தான். ஆனால் தவறாமல் முழுவதுமாக படியுங்கள்)

டெங்கு காய்ச்சல் கொசுவால் வருகிறது என்றும் அதனால் வரும் பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் அதிகம் என்றும் நம் ஊரில் எல்லாருக்கும் தெரியும்.


அந்த டெங்கு காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது என்று தான் ஆயிரம் குழப்பம்.

மருந்து கடையில் மாத்திரை வாங்கி தினமும் முழுங்குவதா?

பக்கத்து தெரு போலி மருத்துவரிடம் போய் தினமும் 2 ஸ்டெராய்டு ஊசி போட்டுக்கொள்வதா?

காய்ச்சல் வந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரி போய் களேபரம் செய்வதா?

மூலிகை கசாயங்கள் குடித்துக்கொண்டு வீட்டிலேயே மஜாவாக இருப்பதா?

என்ன தான் செய்வது? மக்களுக்கு ஒரே குழப்பம்.

இதில் வாட்ஸாப் விஞ்ஞானிகள் வேறு. MR தடுப்பூசியின் போது குட்டையை கிளப்பிய அதே கும்பல் இப்போதும் மக்களை காவு வாங்கியே தீருவோம் என்று புது சபதம் எடுத்துள்ளார்கள்.

*வாட்டசாப்பில் வந்த சில காமெடிகள்:*

டெங்கு என்றொரு நோயே இல்லை. இது கொசு மருந்து விற்க கார்ப்பரேட் கம்பெனி செய்யும் சதி (கொசு மருந்து வித்து அம்பானியா ஆக முடியும்)

ஆன்டிபயாடிக் மருந்து கம்பெனி மாஃபியாவும் இல்லுமிநாட்டியும் அலோபதி மருத்துவர்களும் சேர்ந்து செய்யும் சதி (எங்கயா இருக்காங்க இந்த இல்லுமிநாட்டி,  டெங்குவில் ஆன்டிபியாடிக்கு எந்த வேலையும் இல்லைங்கிறது இவிங்களுக்கு தெரியுமா)

உடலில் உள்ள அழுக்கு கழிவுகள் சேருவதால் தான் டெங்கு வருகிறது. அலோபதி மருந்து சாப்பிட்டால் அழுக்கு தேங்கி விடும். (குட்டைல தண்ணி தேங்கினா கொசு வரும்னு கவர்மெண்ட் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல)

கடைசியா ருபெல்லா தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு எல்லாம் மட்டும் தான் டெங்கு வருது (60, 70 வயசு தாத்தா பாட்டிகளுக்கும், 30, 40 வயசு பெரியவங்களுக்கு எல்லாம் டெங்கு வருதே, அவுங்க எந்த தடுப்பூசி போட்டாங்க. எங்க இருந்துடா வரீங்க நீங்கெல்லாம், டெய்லி டிசைன் டிசைனா யோசிச்சிக்கிட்டு)

இதில் கொடுமை என்னன்னா, நன்கு படித்த மருத்துவம் அல்லாத வேறு துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த வெட்டி மெஸேஜ்களை பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர்.

அதனால்,
குழந்தை நல நிபுணர் என்கிற முறையிலும்,
பல டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஐ சி யூவிலும், வார்டிலும் வைத்து டெங்குவின் பல்வேறு மோசமான முகங்களை தினம் தினம் பார்க்கும் வகையிலும்,
டெங்கு பற்றி பல சந்தேகங்களை முறையாக தீர்த்து வைக்கவே இந்த மெசேஜ்.

நாம பேசலனா, முறையான தகவல் மக்களுக்கு கொடுக்கலனா, அப்புறம் இந்த போலி ஆசாமிகள் சொல்லுறதும், இட்லி சட்னின்னு சினிமாக்காரங்க சொல்லுறதும் தான் உண்மைன்னு ஆயிடும்.

*கேள்வி 1:*

*டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தான் என்னென்ன?*

இப்போதுள்ள நிலைமையில் எப்போதும் சொல்லும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி என்றெல்லாம் டெங்கு வருவதில்லை.
டெங்கு பரவும் ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு 3 நாளுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்தாலே முறையாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

*கேள்வி 2:*

*டெங்கு காய்ச்சல் என்று தெரிந்த உடன் ஆஸ்பத்திரியில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? டெங்கு வந்தாலே கதை முடிந்ததா?*

இல்லை. டெங்கு என்பது மற்ற வைரஸ் காய்ச்சல் போன்றதொரு காய்ச்சல் தான்.

100 பேருக்கு டெங்கு வந்தால்,
அதில் 50 பேருக்கு டெங்கு என்றே தெரியாமல் ஒரு வைரஸ் காய்ச்சல் போன்று வந்து தானாகவே சரியாகிவிடும். இவர்களை *category A* என்பர். இவர்களுக்கு ஆஸ்பத்திரி அட்மிஷன் எல்லாம் தேவை இல்லை. நன்கு நீர் அருந்தி கொண்டு, அதிக காய்ச்சல் இருந்தால் பாராசிடமால் மாத்திரை உட்கொண்டு வீட்டில் இருந்தாலே போதும். 5 நாட்களில் சரியாகிவிடுவார்கள். இந்த மக்கள் தான் டெங்குவில் பெரும்பான்மை என்பதால் தான் பாட்டி வைத்தியமும் நாட்டு வைத்தியமும் வேலை செய்வது போல் தெரிகிறது. ஹீலர் ஆசாமிகள் பிழைக்கிறார்கள்.இவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே சரியாகிவிடுவார்கள்.

இன்னொரு 40 பேருக்கு, வாந்தி, வயிற்று வலி ஜாஸ்தி இருக்கும். தட்டை அணுக்கள் எண்ணிக்கை சுமாராக குறையும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இவர்களை *category B* என்பர். இவர்கள் எங்காவது ஒரு மருத்துவமனையில் இருப்பது நல்லது. ஏனென்றால் இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களை இரத்த பரிசோதனை, நாடி, இரத்த அழுத்தம் , சிறுநீர் வெளியேற்றம் எல்லாம் கொண்டு நன்றாக கண்காணிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாட்டிற்கு iv fluids ஏற்ற வேண்டும். அணுக்கள் எல்லாம் குறைந்து தானாகவே ஏறி விடும். எல்லா பிரச்சனைகளும் ஏழு நாட்களில் சரியாகி விடும்.

கடைசி 10 சதவீத க்ரூப் தான் டேஞ்சர். இவர்களை category C என்பர். இவர்களுக்கு டெங்குவின் தீவிர பாதிப்புகளான
டெங்கு ஷாக் - இரத்த அழுத்தம் குறைபாடு (dengue shock),
இரத்த போக்கு(hemorrhage),
கல்லீரல் பாதிப்பு (liver failure),
சிறுநீரக பாதிப்பு (renal failure),
மூளை பாதிப்பு (encephalitis),
பாக்டீரியா தொற்று (secondary bacterial sepsis)
போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பெரும்பாலும் டெங்குவின் உயிரிழப்புகள் ஏற்படுவது இந்த மக்களுக்கு தான்.
இவர்களை ஐ சி யூ போன்ற பிரத்தியேக வார்டுகளில் வைத்து பார்க்க வேண்டும். இவர்களுக்கு எந்த நொடியும் எந்த பிரச்சனையும் ஏற்படலாம். தீவிர கண்காணிப்பும் சமயத்திற்கு ஏற்ற உயிர் காக்கும் மருந்துகளும் அவசியம்.

சரி, அப்போ 90 சதவீதம் மக்களுக்கு ஒன்னும் ஆகாதுனா, ஏன் இத்தனை பிரச்சனை?

எந்த நபர் எந்த க்ரூப் என்பது டெங்கு கண்டுபிடித்த முதல் நாளிலேயே கூற முடியாது.

7 நாட்களும் முறையான மருத்துவ கண்காணிப்பில் இருந்தால் தான், அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா, மருத்துவமனை வார்டில் வைத்தா அல்லது ஐ சி யூவில் வைத்து சிகிச்சையா என்று கூற முடியும். எனவே டெங்கு என தெரிந்தால் முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை பின்பற்றுங்கள்.

category C நபர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மூலிகை சாறு அருந்திகொண்டிருந்தாலோ, போலி மருத்துவரிடம் ஸ்டீராய்டு ஊசி போட்டு கொண்டிருந்தாலோ, காலி தான்.

இல்லை category A நபர் நன்றாக நீர் அருந்திக்கொண்டு வீட்டில் இருக்காமல், பெரிய மருத்துவமனை சென்று பெட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தாலும், முறையாக சிகிச்சை கிடைக்க வேண்டிய நபர்கள் தான் பாதிக்கப்படுவர்.

*கேள்வி 3:*

*டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்கிறார்களே. நீங்கள் என்ன category a, b, c என்றெல்லாம் புருடா விடுகிறீர்கள்? என்ன தான் சிகிச்சை கொடுப்பீர்கள் மருத்துவமனையில்?*

முதலில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நவீன மருத்துவ சிகிச்சை என்பது வெறும் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதல்ல.

முன்பே சொன்னது போல, category a விற்கும் b விற்கும் எந்த பெரிய சிகிச்சையும் இல்லை. சிறிது பாராசிடமால், வாந்தி மருந்து, வயற்று வலி மருந்து, அவ்வளவே. ஹீலர் ஆசாமிகள் சொல்வது போல் ஆண்டிபயாடிக்கிற்கு எல்லாம் டென்குவில் வேலை இல்லை. 7 நாட்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியே கிருமியை உடலை விட்டு விரட்டி விடும். அதுவரை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடுவில் நீங்கள் கிவி, பப்பாளி, மாதுளை, கருப்பட்டி, நாட்டு வெள்ளம், வெங்காயம் (வேற ஏதாவது விட்டுட்டேன்னா?) இவை எல்லாம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நோய் குணமாவது உறுதி.

Category C நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தான் விஷயமே. இவர்களுக்கு வெறும் மூலிகை கசாயம் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது.
இல்லை பெரும்பாலான மருத்துவர்கள் நினைப்பது போன்று platelet எனப்படும் தட்டை அணுக்கள் 10 பாக்கெட் ஏற்றுவதாலும் நோய் சரி ஆகாது.

என்ன தான் செய்வோம் மருத்துவமனைகளில்?

டெங்கு முதலில் ஒரு platelet (தட்டை அணுக்கள்) குறைபாடு நோய் அல்ல.

டெங்குவில் தட்டை அணுக்கள் குறைகின்றன. அவ்வளவே. அதற்காக தட்டை அணுக்கள் இரத்தமாக ஏற்றுவதோ, தட்டை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க மூலிகை உட்கொள்வதோ எந்த பயனும் அளிக்க போவதில்லை. ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இருக்க வேண்டிய தட்டை அணுக்கள் வெறும் ஐந்தாயிரம் பத்தாயிரம் வந்தாலும், கொஞ்சம் இரத்த கசிவு அல்லது இரத்த போக்கு  ஏற்படலாம், ஆனால் உயிரிழப்பு ஏற்படுவது அதனால் அல்ல.

டெங்குவில் உயிரிழப்புகளுக்கு காரணம் நீர் சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த அழுத்த குறைபாடும்(shock), மூச்சு திணறல்(ards) ஏற்படுவதும் தான். தீவிர இரத்த கசிவுக்கு(hemorrhage) முக்கிய காரணம் உடன் இருக்கும் இரத்த அழுத்த குறைபாடு தான்.

டெங்கு ஒரு நீர் சத்து குறைபாடு நோய். வாந்தி பேதி போன்ற நோய்களில் நீர்ச்சத்து உடலை விட்டு வெளியேறி குறைபாடு ஏற்படுத்தும். ஆனால் டெங்குவில் ஓட்டை போட்ட சட்டி போல, நீர்ச்சத்து இரத்த குழாயை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் உடலுக்கு உள்ளேயே தங்கி விடும். எனவே தான் டெங்குவில் முக வீக்கம், வயறு வீக்கம், நுரையீரல் நீர் தேக்கம் - மூச்சு திணறல் போன்றவை ஏற்படும்.

நோயாளிகள் பார்க்க நீர் தேங்கி உப்பியது போல தோன்றினாலும், இருக்க வேண்டிய இடத்தில் நீர்ச்சத்து இருக்காது. இரத்த குழாயில் நீர் இல்லாததால், இரத்த அழுத்தம் குறைந்து, நாடி பலவீனமிழந்து, மூளை, சிறுநீரகம், ஈரல், போன்ற உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து விடும்.

ஓட்டை போட்ட சட்டியில் தேவையான நீரும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீர் அதிகமாக கசிந்து வெளியே தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
தீவிர டெங்கு நோயாளிகளுக்கு நீர் சிகிச்சை அளிப்பது இரண்டு மலைகளுக்கு நடுவில் கையறு கட்டி நடப்பது போல. இரண்டு பக்கம் தவறினாலும் பிரச்சனை தான்.

Critical phase என்று சொல்லப்படும் இந்த நிலை காய்ச்சலின் 4, 5, 6 ஆகிய நாட்களில் பொதுவாக காணப்படும். முக்கியமாக காய்ச்சல் விட்ட பிறகே பல பிரச்சனைகள் வரும். முன்பு சொன்னது போல உடலின் நோய் எதிர்ப்பு சக்தி 7வது நாளில் கிருமியை விரட்டும் வரை நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு ஆகிய அதிமுக்கிய விஷயங்களை சீராக கண்காணித்து பார்த்துக்கொண்டாலே போதும்.

நீர் சத்து ஏற்றத்திற்கு(iv fluids) கட்டுப்படவில்லை என்றால்,
செயற்கை சுவாசம்(ventilation),
இரத்த ஏற்றம்,
இரத்த அழுத்த முன்னேற்ற மருந்துகள்(ionotropes),
சிறுநீரக டயாலசிஸ்
போன்ற சிகிச்சைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கிருமியை விரட்டிய பிறகு இந்த supportive measures குறைத்து நிறுத்தப்படும்.
கை கால் உடைந்தால் எலும்பு கூடும் வரை மாவுக்கட்டு போட்டு  ஒரு தடி வைத்து நடக்கிறோம் அல்லவா, அது போல தான் இந்த ஐ சி யு சிகிச்சைகள் டென்குவில்.

Category C நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு நபர்/குழந்தையை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கவில்லை என்றாலோ, தக்க சமயத்தில் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை என்றாலோ, மருத்துவமனைக்கு காலதாமதமாக கொண்டு சென்றாலோ, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இதனால் தான் டெங்குவில் தினம் தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கூறிய அனைத்தும் டெங்கு போல நிலவும் மற்ற வைரஸ்/மர்ம காய்ச்சல்களுக்கும் பொருந்தும்.

*கேள்வி 4:*

*அப்படி என்றால் இந்த மூலிகைகள், கசாயங்கள், பப்பாளி இலை மாத்திரைகள் பற்றிய உங்கள் கருத்து?*

இதை பற்றிய ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகளில் சிறிது பயன்கள் இருப்பது போல் தோன்றினாலும், பப்பாளி போன்ற சாறுகள் சிறிதளவு அணுக்கள் எண்ணிக்கையை ஏற்றுவது போல இருந்தாலும், தீவிர டெங்குவில் இதன் பங்கு எதுவும் இருப்பது மாறி தெரியவில்லை.

தாய்லாந்து , இலங்கை போன்ற நாடுகளில் இந்த மூலிகைகளை வைத்து செய்த ஆராய்ச்சிகளிலும் இதுவே தெரிய வந்துள்ளது. டெங்குவினால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதிலோ, தீவிர பாதிப்புகளை குறைப்பதிலோ இவை உதவுவது போல எந்த ஆராய்ச்சியும் வெளிவரவில்லை.

ப்ராக்டிகளாக தினம் தினம் ஐ சி யூ வில் டெங்கு பேஷண்ட் பார்க்கும் எங்களுக்கும், இந்த சாறுகள் குடித்தவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரிவதில்லை.

எனவே இந்த சாறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தி கொள்ளுங்கள். தப்பில்லை. அவை ஒரு மூலையில் வேலை செய்தால் செய்து விட்டு போகட்டும். ஆனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்யாமல் வீட்டில் இருந்து விடாதீர்கள். டெங்குவில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.

*கேள்வி 5:*

*டெங்கு இருக்கிறது என்று தெரிந்த நபர்/குழந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்?*

கீழ்கண்டவற்றை warning signs / எச்சரிக்கை அறிகுறிகள் என்போம்.

தீவிர வயிற்று வலி
தொடர் வாந்தி
மூக்கு, பல் ஈறு போன்றவற்றில் இரத்த கசிவு
கண், வயறு வீக்கம்
மூச்சு திணறல்
வழக்கத்திற்கு மாறான உடல் சோர்வு
பரிசோதனைகளில் வேகமாக தட்டை/வெள்ளை அணுக்கள் குறைவது. (எல்லாருக்கும் தெரிந்த, பயப்படும், ஆனால் பெரிதாக பயனற்ற பரிசோதனை இது)
பரிசோதனைகளில் hematocrit / PCV எனப்படும் இரத்த அடர்த்தி அதிகம் ஆவது. (டெங்குவில் மிக மிக முக்கியமானதும், பெரிதாக வெளியே தெரியாமலும், கண்டுகொள்ளாமல் விடுவதும் இந்த காரணியே. இதை சரியான நேரத்தில் கவனித்தாலே பாதி இழப்புகளை தவிர்க்க முடியும்)

மேற்கூறிய எந்த பிரச்சனை இருந்தாலும் அந்த நோயாளி உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
ஒரு நோயாளி Category B இல் இருந்து Cக்கு செல்ல ரொம்ப நேரம் பிடிக்காது.
ஆரம்பத்தில் கவனிக்காமல், Category C இல் decompensated shock எனப்படும் மீள முடியா இரத்த அழுத்த குறைபாட்டிற்கு சென்று விட்டால், அப்புறம் என்ன சிகிச்சை செய்தாலும் பெரிதாக பயன் தருவதில்லை.

*கேள்வி 6:*

*டெங்கு நோயால் குழந்தைகள் அதிகமாக இறப்பதற்கு காரணம் என்ன? மருத்துவர்களின் அல்லது மருத்துவமனைகளின் அலட்சிய போக்கு தான் காரணமா?

டெங்குவினால் மற்றும் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலினால் தினம் தினம் பற்பல இறப்பு செய்திகள் டிவி செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன.
சரியான சிகிச்சை அளிக்காதது தான் காரணம் என்று மக்கள் சண்டை போடுவதும் கேஸ் போடுவதும் என்று காலம் செல்கிறது. மிகப்பெரிய அரசு மருத்துவமனைகள் முதல் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் வரை அனைத்தும் இந்த பழிகளை சுமக்கின்றன.

காரணங்கள் என்னென்ன?

1. டெங்கு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்(warning signs) தெரியாததால், category cக்கு செல்லும் குழந்தைகளை கண்டுபிடிக்க தெரியாமல் போவதுமுக்கிய காரணம். முக்கியமாக குழந்தைகளில் bp குறைய ஆரம்பிக்கும் முன்னரே வேறு சில அறிகுறிகளை வைத்து  இரத்த ஓட்ட குறைபாட்டை கண்டுபிடித்தால் தான் அவர்களை காப்பாற்ற முடியும். Bp குறைய ஆரம்பித்த பிறகு என்ன செய்தாலும் வீண் தான்.

2. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் டெங்குவினால் ஏற்படும் இரத்த ஓட்ட குறைபாடு, மூச்சு திணறல் மிக அதிகம். அவை தான் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம். பெரியவர்களுக்கு பெரும்பாலான பேருக்கு தட்டை அணுக்கள் 5000, 10000 என குறைந்தாலும் பெரிய பிரச்சனைகள் வருவதில்லை.

3. எச்சரிக்கை அறிகுறிகள்(warning signs) தெரிந்த பிறகு வீட்டில்  உட்கார்ந்து கொண்டு காலம் தாழ்த்துவது சீரியசான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டென்குவில் காய்ச்சல் விட்ட பிறகே , அதாவது 4, 5, 6ஆம் நாட்களில் தான் சீரியசான பிரச்சனைகள் வரும். பெரும்பாலான பெற்றோர்கள் காய்ச்சல் விட்டுவிட்ட பிறகு எல்லாம் சரியாகி  விட்டது என்று நினைத்து கொண்டு வீட்டில் இருந்து விடுவார்கள். அப்படி விட்டு, கடும் இரத்த ஓட்ட குறைபாட்டில் பல குழந்தைகள் கூட்டி வரப்படுகிறார்கள். இந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

4. டென்குவில் உயிர் பிரியும் தருவாய்க்கு 2 மணி நேரம் முன்பு வரை கூட, குழந்தைகள் நார்மலாக பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு bp, பல்ஸ் மிகவும் குறைந்து, கை கால்கள் சில்லென இருப்பது, சிறுநீர் வராமல் இருப்பது பெற்றோர்களுக்கு கண்ணில் படாது. எனவே தான் நிறைய சமயம், “நல்லா இருந்தான், டாக்டர் சிகிச்சை கொடுக்கல. திடீர்னு இறந்துட்டான்” என்று எல்லாம் வசவுகள் வருகின்றன. என் ஒபிடிக்கு வெளியில் கூட சென்ற மாதம், ஒரு சிறுவன் ஒரு மணி நேரமாக மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்தவனை உள்ளே கூட்டி வந்தார்கள். உள்ளே நுழைந்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். பார்த்தால் bp இல்லை, பல்ஸ் இல்லை, தட்டை அணுக்கள் வெறும் ஐந்தாயிரம், உடல் முழுக்க இரத்த சிவப்பு புள்ளிகள்(தோலில் இரத்த கசிவு), ஐ சி யு வில் வைத்து கடைசியாக காப்பாற்றப்பட்டான். அவன் அவ்வளவு சீரியஸாக இருந்தது அந்த நிமிஷம் வரை படித்த பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை. அப்போது படிக்காத பாமர மக்களை எண்ணி பாருங்கள்.

5. இவ்வளவு விஷயங்களை தாண்டி மிக அருமையாக உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் செய்தாலும், category c இல் வரும் நோயாளிகளில் ஒன்றில் இருந்து ஐந்து சதவீத உயிரிழப்பு தவிர்க்க முடியாத ஒன்று. அதை தவிர்ப்பது நம் கையில் இல்லை.

ஆனால் மிச்சம் 95 சதவீத உயிரிழப்புகள் கட்டாயம் தவிர்க்கக் கூடியதே.
அது வெறும் மருத்துவர் கைகளில் மட்டும் இல்லை. உங்கள் கைகளிலும் தான் உள்ளது.

*கேள்வி 7:*

*டெங்குவை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை? அரசின் அலட்சியம் தான் காரணமா?*

டெங்கு நோய் தடுப்பு பணிகளில் அரசு சுகாதார துறையை சேர்ந்த மருத்துவர்களும் மற்ற பணியாளர்களும் பன் மடங்கு வேலைகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மருத்துவ மனைகளில் உள்ள மருத்துவர்களும், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் துரிதமான வேலைகளினால் தான் பல ஊர்களில் டெங்கு சீக்கிரம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.

ஆனாலும் புதிது புதிதாக பல்வேறு ஊர்களில் டெங்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது.

ஏன் என்று பார்ப்போம்.

டெங்கு நோய் கிருமியை பகலில் கடிக்கும் ஏடிஸ் கொசு பரப்புகிறது.
1970க்கு முன் வெறும் 9 நாடுகளில் தொந்தரவு ஏற்படுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து வருகிறது. கிட்டத்தட்ட வருடத்திற்கு  10 கோடி பேர் இந்த டெங்குவினால் உலகம் முழுதும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

பருவ நிலை மாற்றம்,
நாடுகள் மற்றும் ஊர்களுக்குள் அதிக போக்குவரத்து,
நகரமயமாக்கல்,
ஜன தொகை மற்றும் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு,
சுற்றுப்புற சுகாதார கேடு,
ஆகிய காரணிகள் இந்த நோய் பரவுவதற்கு காரணமாக அமைகிறது.

சில நாடுகளில் மட்டும் இருந்த கொசுவும் கிருமியும் அப்படி இப்படி என்று பல உலக நாடுகளில் பரவி விட்டது. இன்னும் பரவி வருகிறது.

சும்மா கொசு மருந்து அடித்து விட்டால் மட்டும் இந்த நோய் ஒழிந்து விடாது.
ஆராய்சிகளின் படி இந்த ஏடிஸ் கொசுக்கள் சாதாரண கொசு மருந்துகளுக்கு கூட சரியாக கட்டுபடுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த கொசுக்கள் உருவாகும் இடங்களான நீர் தொட்டி, டயர், தேங்காய் தொட்டி, பிரிட்ஜின் பின்புறம் , மாடிகளில் உள்ள காரை விரிசல்கள், மற்றும் தூய தண்ணீர் தேங்கும் அணைத்து இடங்களிலும் இந்த கொசுக்களின் லார்வா புழுக்கள் இருக்கும்.
இவைகளில் நீர் தேங்காமல் பார்க்க வேண்டும்,
லார்வா புழுக்கள் இருந்தால் சுகாதார துறையினர் உதவியோடு அவற்றை மருந்தடித்து அழிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் வீடு மற்றும் சுற்றுபுரங்களில் தான் செய்ய முடியும்.

இதை எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டால் கூட,
ரோட்டோரம் இருக்கும் டயர்களிலும் தேங்காய் மூடிகளிலும் பாறை குழிகளிலும் மழை வந்த பிறகு தேங்கி இருக்கும் நீரில் உருவாகும் கொசுக்களை எப்படி தடுப்பது? இது தான் நமக்கு மிகப்பெரிய சேலஞ்சு.

இதனால் தான் டெங்குவை தடுப்பது சிம்ம சொப்பனமாக ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் உள்ளது.
பிரேசில், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, போன்ற நமக்கு இணையான அல்லது இன்னும் சுத்தமான நாடுகளில் கூட டெங்கு ஆட்டம் காண்பிக்கிறது.
கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தில்லி ஆகிய மாநிலங்களிலும் டெங்கு பட்டையை கிளப்புகிறது.

எனவே சும்மா அரசையும் மருத்துவர்களையும் குறை கூறிகொண்டிருக்காமல் உங்கள் வீட்டில் இருந்து கொசு தடுப்பு நடவடிக்கைகளை தொடங்குங்கள்.

டெங்குவை தடுக்க கொசுவை ஒழிப்பது தவிர வேறெந்த முயற்சியும் பயன் தராது.

டெங்கு வந்து விட்டால், முறையாக மருத்துவ ஆலோசனையை சரியான நேரத்தில் பெற்று தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளாகாமல் தடுத்து கொள்ளுங்கள்.

மேலும் பதிவுகளுக்கு, கீழ்காணும் முகநூல்(facebook) முகவரியை காணவும்.

www.facebook.com/arun.exl

டெங்கு பற்றி ஒரு மருத்துவ மீட்டிங்கில், மருத்துவர்களிடம் பேசிய ppt இணைத்துள்ளேன்.

https://www.slideshare.net/arunexl/pediatric-dengue-management-dr-arunkumar-mdpaed

பல நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் டெங்கு பற்றிய நல்ல விஷயங்களை இணையத்தில் தினம் பகிர்ந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் டெங்கு நோய் சிகிச்சை கையேடு, தமிழக அரசின் டெங்கு ஆண்ட்ராய்டு ஆப், போன்ற முக்கிய லிங்குகளை தொகுத்துள்ளேன். விபரங்களுக்கு மேலும் படிக்கவும்.

https://www.facebook.com/farookabdulla1988

http://www.who.int/iris/bitstream/10665/76887/1/9789241504713_eng.pdf?ua=1

https://play.google.com/store/apps/details?id=com.dph.denguefeverapp&hl=en

https://play.google.com/store/apps/details?id=in.gov.nhp.indiafightsdengue&hl=en

*_டாக்டர். அ. அருண்குமார், MD(Pediatrics),_*
*_குழந்தை நல சிறப்பு மருத்துவர்,_*
*_ஈரோடு._*

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!