இரு நாட்களில், வட கிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை, மே, ௩௦ல் துவங்கியது. ஐந்து மாதங்களாக, நாடு முழுவதும் சுழன்று, மழை கொடுத்து, நேற்று விடை பெற்றது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் மைய மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில், சென்னை மற்றும் திருவள்ளூரை ஒட்டிய பகுதி, கோவை மற்றும் அதையொட்டிய மேற்கு மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று காலை, 8.30 மணியுடன் முடிந்த, 24மணி நேரத்தில், ஸ்ரீவைகுண்டம், 5; சேரன்மகாதேவி, 4; அரண்மனைப்புதுார், 3; சாத்துார், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, காஞ்சிபுரம், 2; பரமக்குடி, விருதுநகர், வந்தவாசி, வேதாரண்யம் மற்றும் உத்தமபாளையம், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதனிடையே, 'வடகிழக்கு பருவமழை துவங்க, சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, நாளைக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் அவசர ஆய்வு : வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் தலைமையில், நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை முதன்மை செயலர், பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர், மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், எடுக்க வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பருவ மழைக்கு முன், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், உடைப்பு ஏற்பட்டால், அவற்றை தடுக்க தேவையான மணல் மூட்டைகளை தயார் செய்யவும், முதல்வர் உத்தரவிட்டார்.