'மாவட்டங்களுக்கு, இதுவரை இலவச சைக்கிள் உதிரி பாகங்கள் வராத நிலையில், நடப்பு கல்வியாண்டிலும், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, சைக்கிள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வு துவங்கும் முன், வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.


3 மாதங்களுக்குள் : தமிழகத்தில் மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்கில், அறிமுகப்படுத்தப்பட்ட இலவச சைக்கிள் திட்டம், அரசு பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், அனைத்து மாணவ - மாணவியருக்குமாக விரிவு படுத்தப்பட்டது.
பிற்பட்டோர், மற்றும் ஆதி திராவிட நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை இணைந்து, ஆண்டுதோறும், 6.5 லட்சம் சைக்கிள்களை, 250 கோடி ரூபாய் மதிப்பில், கொள்முதல் செய்கின்றன. கல்வியாண்டின் துவக்கத்திலேயே, மாணவர்களின் எண்ணிக்கைப்படி, சைக்கிள் தேவை குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக, கல்வியாண்டு துவங்கிய மூன்று மாதங்களுக்குள், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
கடந்தாண்டு, முதல்வராக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனைக்கு சென்றதாலும், நிர்வாகத்தில் ஏற்பட்ட தாமதத்தாலும் கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், முதல் மூன்று மாதங்களுக்குள் சைக்கிள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை, மாவட்டங்களுக்கு சைக்கிள் உதிரி பாகங்கள் வந்து சேரவில்லை.

பல்வேறு சமரசங்கள் : கல்வியாண்டின், இறுதியில் தான், சைக்கிள் வழங்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால், மாணவ - மாணவியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு, பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கிய நிலையில், சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதனால், அவற்றை வழங்குவதில் பல்வேறு சிரமங்களும் உருவாகின. மாவட்டங்களுக்கு உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டால், அவற்றை சைக்கிள்களாக மாற்றி, மாணவர்களுக்கு வழங்க, இரண்டு மாதங்களாவது கால அவகாசம் தேவைப்படும்.ஆனால், இதுவரை உதிரிபாகங்கள் வந்து சேரவில்லை. இதனால், நடப்பாண்டும், கடந்த ஆண்டை போலவே, சைக்கிள் வழங்குவதில், தாமதம் ஏற்படும். பொதுத்தேர்வு நடவடிக்கை துவங்கும் முன்பே, சைக்கிள்களை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.