அண்ணா சாலையில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில், சமூக விரோதிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், பிரச்னையை தீர்க்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் சந்திப்பு அருகே, காயிதே மில்லத் மகளிர் கல்லுாரி மற்றும் மதரஸா இ ஆஸம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 168 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளி, ஆற்காடு நவாப் குடும்பத்தினரால், கல்வி நிறுவனத்துக்காக வழங்கப் பட்டது.இந்த பள்ளியில் படித்த பலர், அரசின் உயர் பதவிகளை பெற்றுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் வரை, 2,500 பேர் படித்த நிலையில், தற்போது, வெறும், 150 பேர் மட்டுமே படிக்கின்றனர். 


அதற்கு, 'பள்ளி வளாக கட்டடம் மற்றும் சமூக விரோதிகளின் அராஜகமே காரணம்' என, பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும், கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.


மாணவர்கள் அச்சம்:

பள்ளியின் புராதன கட்டடம் சிதிலமடைந்து, ஆறு துாண்களுடன் எலும்புக்கூடாக நிற்கிறது. அதை இடிக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் புராதன கட்டட பாதுகாப்பு குழு, பள்ளிக்கல்வி ஆகியன, பொதுப்பணித்துறைக்கு பரிந்துரைத்து உள்ளது. ஆனால், கட்டடம் இடிக்கப்படவில்லை.


ஒவ்வொரு மழை காலத்திலும், கட்டடத்தின் ஒரு பகுதி இடிவது வழக்கம். தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமான நிலையில், கட்டடம் எப்போது இடியுமோ என, மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில், புதிதாக சமூக விரோதிகளின் அச்சுறுத்தலும் சேர்ந்துள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள, விளையாட்டு மைதானங்களை, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக, பள்ளிக்கல்வி சார்பில், அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.


சமீபகாலமாக, பள்ளி வளாகத்திற்குள் போதை ஆசாமிகள், பொறுக்கிகள், சமூக விரோதிகள் பலர், சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து அராஜகம் செய்வதாக புகார் எழுந்தது.இந்த பிரச்னையை தொடர்ந்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள், பள்ளி வளாகத்தில், இரு தினங்களுக்கு முன் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, 'பள்ளி வளாகத்திற்குள், அன்னியர்கள் நுழையக் கூடாது' என, எச்சரிக்கை பலகை மாட்டப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம், பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், சமூக விரோதிகளால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, பீதி ஏற்பட்டுள்ளது.


மாணவியருக்கு ஆபத்து:

பள்ளி வளாகத்தை ஒட்டி காயிதே மில்லத் மகளிர் கல்லுாரி உள்ளது. மாணவியர் வந்து நிற்கும் பஸ் நிறுத்தமும், பள்ளியின் முன் உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், கல்லுாரி மாணவியருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.எனவே, பள்ளி வளாகத்திற்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிப்பதுடன், சட்டரீதியாக பிரச்னையை முடிக்க, அரசு முன் வர வேண்டும் என, பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.