மதுரை, மதுரை ஒத்தக்கடை அரசுப் பள்ளிக்குரிய இடத்தில் மேலுார் 

ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைப்பதற்கு எதிராக தாக்கலான வழக்கில்,'பள்ளிக்குரிய இடத்தை வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. இடத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்,' 
என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஒத்தக்கடை சாந்த மூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு:
ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்குச் சொந்தமான இடம், 
நரசிங்கத்தில் உள்ளது. 
அந்த இடத்தைஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், தற்போது அங்கு மேலுார்ஆர்.டி.ஓ.,அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைக்க மதுரை பொதுப்பணித்துறை (கட்டுமானம், பராமரிப்பு) கண்காணிப்புப் பொறியாளர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.
விவசாயக் கல்லுாரி அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு ஆர்.டி.ஓ.,அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் 
அமைக்கலாம். 
டெண்டர் அறிவிப்பிற்குதடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். அந்த இடத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கமதுரை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சாந்தமூர்த்தி மனு 
செய்திருந்தார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வு உத்தரவு:
அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. பள்ளிக்குரிய இடத்தை வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. எனவே, அந்த இடத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.