கோவை:கோவை அரசு மருத்துவமனையில், உளவியலாளர் பணியிடம் இல்லாததால், கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


வகுப்பறையில் புறக்கணிக்கப்பட்ட பல குழந்தைகள் பின்னாளில் சாதனை சிகரங்களை எட்டி மற்றவர்களை வியக்க வைத்துள்ளனர். உலகளவில்கற்றல் குறைபாட்டினால் வகுப்பறையை விட்டு வெளியேறிய பலர், தனித்திறன் சாதனையாளர்களாக பயணத்தை தொடர்வதையும் பார்க்க முடிகிறது.

வகுப்பறையில் கற்றலில் சிரமப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான மாற்று முறை கற்றல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளைஅனைவருக்கும் கல்வித் திட்டம் படிப்படியாக செய்து வருகிறது.

'நீ உருப்படவே மாட்டாய்' என, வகுப்பறையில்அவநம்பிக்கையால் நொறுக்கப்பட்ட பல பிஞ்சு மனங்கள், தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது, வைரங்களாக ஜொலிக்கின்றன. வெளிநாடுகளில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், ஜூராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என, கற்றல் குறைபாட்டில் இருந்து மீண்டு சாதித்தவர்களின் பட்டியல் நீளமானது.
நம் நாட்டில் உள்ள பள்ளி வகுப்பறையில், 12 சதவீதம் குழந்தைகள் தினமும் கற்றல் குறைபாட்டோடு போராட்டம் நடத்துகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய குழந்தைகளுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வு நேரங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனையில் உள்ள மனநல துறை மருத்துவர்களிடம் சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. இச்சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழகத்தில் பங்கேற்று சான்றிதழ் பெறலாம்.
மருத்துவ கழகத்தில் உள்ள மனநல மருத்துவ துறை டாக்டர்கள் மாணவர்களை பரிசோதித்து சான்றிதழ் வழங்குகின்றனர். இவர்கள், மருத்துவ முறைப்படி, மாணவர்களின் உடலை பரிசோதித்து குறைபாடுகளை கண்டறிந்து சான்றிதழ் வழங்குகின்றனர்.

ஆனால், உளவியல் அடிப்படையிலான பிரச்னைகளை இவர்களால் கண்டறிய முடியாது; கண்டறிந்தாலும் அதை உறுதி செய்து சான்றளிக்க சட்டத்தில் இடமில்லை. உளவியல் பிரச்னையுள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க உளவியலாளர்களால் மட்டுமே முடியும்.
கோவை அரசு மருத்துவமனையில் அப்பணியிடம் இல்லாததால், இச்சான்றிதழுக்காக மாணவர்கள் சென்னை, மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதைப் போக்க, உளவியலாளர் பணியிடத்தை உடனடியாக மருத்துவமனையில் ஏற்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை மனநல மருத்துவ துறை தலைவர் சண்முகையா கூறியதாவது:
கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை தான். இது மூளை விவரங்களை அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படக்கூடும்.

கற்றல் குறைபாடுகள் என்ற வகையின் கீழ், பலவிதமான குறைபாடுகள் உள்ளன. கற்றல் குறைபாடுகள் உடல் சார்ந்த நோய்களாலோ, மன நோய்களாலோ பொருளாதார நிலை அல்லது கலாசாரப் பின்னணியினாலோ உண்டா வதில்லை.

கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என, அர்த்தமில்லை. இவர்கள் பிற குழந்தைகளை போல நல்ல நிலையில் தான் இருப்பர். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கலாம்.
மருத்துவ துறை சார்ந்த பிரச்னைகளை நாங்கள் கண்டறிந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான பயிற்சியையும் வழங்குகிறோம். இதன் மூலம் அவர்கள் விரைவில் குணமடைவர். உளவியல் அடிப்படையிலான பிரச்னைகளுக்கு உளவியலாளர்களால் மட்டுமே தீர்வு வழங்க முடியும். அப்பணியிடம் இங்கு இல்லாததால், மதுரை, சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பணியிடம் ஏற்படுத்துவதற்கான கோரிக்கையை மருத்துவமனை டீன் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். விரைவில், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆண்டுக்கு 182 பேர்!

கடந்த ஓராண்டில், கோவை அரசு மருத்துவமனைக்கு கற்றல் குறைபாடு குறித்த சான்றிதழ் பெற, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 182 பேர் வந்துள்ளனர். இவர்களில் உளவியல் சான்றிதழுக்காக பிற மருத்துவமனைகளுக்கு, 12 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை அரசு மருத்துவமனை மண்டல மருத்துவமனையாக இருப்பதால், கோவை, திருப்பூர், நீலகிரி மட்டுமின்றி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அரசு உளவியலாளர் பணியிடத்தை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.