திண்டுக்கல்: தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்க கருவூலத்துறைக்கு அரசு முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாத ஊதியம் கல்வித்துறை, நிதி துறை ஒப்புதல் பெற்று கருவூலத்துறை மூலமாக சம்பளம் வழங்க வேண்டும்.
சம்பளம் வழங்க நிதித்துறையில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவித்தனர்.
இது குறித்து நவ.,5ம் தேதி தினமலர் நாளிதழில் 'பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு' என செய்தியாக வெளியானது. இதனை தொடர்ந்து அரசு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவு:
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9 பணியிடங்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரப்பப்படும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு தற்காலிக ஒப்பளிப்பு செய்து ஆணை வெளி யிடப்படுகிறது. சம்பளம் மற்றும் இதர செலவின பட்டியல்களுக்கு சம்பள கணக்கு அலுவலர், கருவூல அலுவலர், உதவி கருவூல அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஊதியம் வழங்க உத்தரவிடப்படுகிறது, என தெரிவித்துஉள்ளார்.