பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிகிறது. இத்தேர்வில், எட்டு லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. தேர்வு கட்டணமாக, செய்முறை பாடங்கள் அடங்கிய மாணவர்களுக்கு, 225 ரூபாய்; செய்முறை அல்லாத பாட மாணவர்களுக்கு, 175 ரூபாய்; மதிப்பெண் பட்டியலுக்கு, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை, 29க்குள் வசூலித்து, தாமதமின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டு உள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வழி அல்லாத மாணவர்களில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கட்டண விலக்கு உண்டு. 
பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் மாணவர்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பெறுவோர் மட்டும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் அனைவரும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.