சென்னை: 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வுக்கு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி பதவி உட்பட, அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 
பிப்., 11ல், இத்தேர்வு நடத்தப்படுகிறது; தேர்வுக்கு, 20.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, http://www.tnpscexams.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரர்கள், பயனாளர் குறியீடு, பிறந்த தேதியை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சரியாக விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்திய ரசீதின் நகலுடன், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, பிப்., 6க்குள் கடிதம் அனுப்ப வேண்டும்.
அதில், பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய வங்கி அல்லது தபால் அலுவலகம், கட்டணம் செலுத்திய தேதி, பரிமாற்ற அடையாள எண் விபரங்களை இணைக்க வேண்டும். 
கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலும், 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.