பசுமைப்பள்ளி குட்டிவிவசாயிகள்
இணையம்முதல் இயற்கை வரை

இன்றைய இளைய சமுதாயம் *இணையத்தின்* காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. அந்த இளைய சமுதாயத்திற்கு *இயற்கையின்* மீதும் நேசத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு
*ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு* இருக்கிறது. மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் போதாது. விளையாட்டும் வேண்டும். விவசாயமும் வேண்டும்.

எனவே தான் நாங்கள் இணையத்தின் மூலம் Smart Class, Smart Board, Skype மூலம் கலந்துரையாடல் போன்ற கற்பித்தல் செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் அதே வேளையில், இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளியில் நிழல் தரும் மரங்கள், மலர் தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி அதில் மாணவர்களை ஈடுபடுத்தினோம். மாணவர்கள் ஓய்வு நேரங்களில் *குட்டிவிவசாயிகளானார்கள்*.
சட்டமன்ற உறுப்பினர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் வந்து மரக்கன்றுகளை நட்டார்கள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு *பாலைவனம்* போல காட்சியளித்த எங்கள் பள்ளி இப்போது மாணவர்கள்,  ஆசிரியர்கள் முயற்சியினால் *பசுமைப்பள்ளியாக* மாறி
*சோலைவனமாக* காட்சி அளிக்கிறது.

அதற்கு முத்தாய்ப்பாக மிகச்சிறிய காலி இடத்தில் மாணவர்கள் தாங்களே விதைத்து, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்த்த காய்கறி தோட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பூசணிகளை *அறுவடை* செய்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரும் வாரத்தில் அவற்றை சத்துணவில் சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளோம். இத்துடன் சேர்த்து கடந்த இரண்டு மாதத்தில் 25 பூசணிகளை விளைவித்துள்ளனர். குட்டி இடத்தில் குட்டி விவசாயிகளின் குட்டி அறுவடை...
குடியரசு தினத்திலும் 25 மலர் செடிகள் நட்டோம்.

இணையம் மன உளைச்சலைத் தரும்.
இயற்கை மன அமைதியைத் தரும்.

இயலும் வரை இணையம் இன்பம் தரும்.
இருக்கும் வரை இயற்கை இன்பம் தரும்.

இயற்கையை போற்றுவது
தமிழர்களின் பண்பாடு.

இயற்கையை நேசிப்போம்.
விவசாயத்தை பாதுகாப்போம்.

ஊ.ஒ.தொ.பள்ளி,
*பள்ளிகுப்பம்,*
மாதனூர் ஒன்றியம்.