மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவித்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இன்று, இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வார ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நீட் மே 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த வாரம், மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு, வட இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 'பிள்ளைகள் கடந்த ஓராண்டாக மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவரும் நிலையில், திடீரென தேர்வில் மாநில பாடத்திட்டத்தை சேர்ப்பது மாணவர்களுக்குப் பாதகமாய் அமையும். கடந்த ஆண்டு எந்தப் பாடத்திட்டத்தை கடைப்பிடித்ததோ, அதே பாடத்திட்டத்தில் தேர்வை நடத்த வேண்டும்' என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, சி.பி.எஸ்.இ அமைப்பு தனது இணையத்தளத்தில், 'நீட் பாடத்திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் தேர்வு நடத்தப்படும்' என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, ``நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தைச் சேர்க்கப்படும். இதுகுறித்து, மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசி இருக்கிறேன். மத்திய அமைச்சர் மாநில பாடத் திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்க உறுதியளித்துள்ளதாக" தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால், மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் மீண்டும் குழப்பமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.கடந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். கடைசி வரை நீட் தேர்வு இருக்காது என்று பேசி வந்தனர். சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கும் சட்ட மசோதாவுக்குக் கடைசி வரை குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கை நடைபெற்றது. அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த ஆண்டு, நீட் தேர்வு நடைபெறுமா என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. மருத்துவம் படிக்க ஆர்வம் உள்ள அனைவரும் கட்டாயம் தேர்வு எழுதியாக வேண்டும்.

எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் தனித்தனி தேர்வு எழுத வேண்டும்.

தற்போது, தேர்வு பாடத்திட்டங்கள் குறித்து குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சி.பி.எஸ்.இ அறிவித்துள்ள பாடத்திட்டமா அல்லது மாநில பாடத்திட்டத்தையும் சேர்த்து நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுமா என்பது குறித்து விரைவில் மனித வளத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். அதுவரை, தமிழக அரசியல்வாதிகள் மாணவர்களைக் குழப்பாமல் இருப்பது நல்லது.

உச்ச நீதிமன்றம், `நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகள் கொண்ட தேர்வை நடத்த வேண்டும்` என்று தீர்ப்பு வழங்கி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.