'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தை, 12 நாட்களில், 1.13 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், 2.5 லட்சம் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத உள்ளனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த, ஒரு லட்சம் மாணவர்களும், 'நீட்' தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில், பிப்., 9ல் வெளியானது. அதேநாளில் இருந்து, 'ஆன் லைன்' பதிவும் துவங்கியது. தேர்வு அறிவிக்கப்பட்டு, 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று வரை, 1.13 கோடி பேர், 'நீட்' தேர்வு இணையதளத்தை பார்வையிட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., இணையதளத்தை, ஒன்றரை ஆண்டுகளில், 5.26 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், தமிழக பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தை, ஏழு மாதங்களில், 1.53 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இந்த தளங்களை விட, குறுகிய காலத்தில், 'நீட்' இணையதளத்தை, அதிகம் பேர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு நாளைக்கு, 10 லட்சம் பேர், 'நீட்' தளத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.