தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. 
அரசு ஊழியர்கள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தும்போது, அதுதொடர்பாக அவர்களை அழைத்துப் பேசுவது தான் சரியான அணுகுமுறையாகும். மாறாக போராட்டம் நடத்தும் பணியாளர்களைக் கைது செய்வது எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, அடக்குமுறைகளை கைவிட்டு அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.