அரசுப் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சீருடைகளை வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இது குறித்து அவர், சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு (2018-2019) முதல் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை; 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை; 9,10 வகுப்புகள்; பிளஸ் 1, பிளஸ் 2 என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையான வடிவமைப்பு, நிறங்களில் சீருடைகள் இருக்கும். ஒன்று முதல் 8 -ஆம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டு முதல் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீருடையை வெளியில் வாங்கிக் கொள்ளலாம்.

சீருடைக்காக பெற்றோருக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு, சீருடைகளை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்க அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த ஆசிரியர்களை வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.