கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:-
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக உயர் கல்விக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. துணைவேந்தர் கணபதி கையூட்டு வாங்குகிறார் என்றால், அதில் அவருக்கு மட்டுமே பங்கு இருந்திட வாய்ப்பு இல்லை. வேறு சிலருக்கும் பங்கு இருக்கும். எனவே, இந்த முறைகேட்டில் கணபதியுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதையும் விசாரணை செய்து அவர்களையும் கைது செய்யவேண்டும். 
அதுமட்டுமின்றி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுவிடவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று கொண்டுதான்  இருக்கின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும்கூட பணியாளர் நியமனத்திலும், பேராசிரியர் நியமனத்திலும் கையூட்டு தொடர்ந்து பெறப்படுவதாக இப்போதும் புகார்கள் கூறப்படுகின்றன. 
இந்த மோசமான நிலையை மாற்றி, மாநிலத்தின் உயர்கல்வியை உண்மையிலேயே உயர்த்த வேண்டும் எனில் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பணியாளர் மற்றும் 
பேராசிரியர் நியமனம், கட்டுமானப் பணிகள் உள்பட பிற பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த ஆய்வை நடத்த பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில அளவிலான உயர் நிலை ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
மேலும், பேராசிரியர் தேர்வு, துணைவேந்தர் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 
வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் விவரங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் வரை அனைத்தும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்; அப்போதுதான் ஊழலை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்றார்.