வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 124 கல்லூரிகளில் பயிலும் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியர்களின் பருவத் தேர்வு முடிவுகளை துணைவேந்தர் க.முருகன், பல்கலைக்கழகப் பதிவாளர் வெ.பெருவழுதி ஆகியோரின் ஒப்புதலுடன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பா.செந்தில்குமார் புதன்கிழமை இணையதளத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பா.செந்தில்குமார் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 124 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 
இவற்றில் 38 இளங்கலை, 24 முதுகலை பாடப் பிரிவு, 12 ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கான பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வுகளை மொத்தம் 1 லட்சத்து, 45 ஆயிரத்து 389 பேர் எழுதினர். இவர்களில் 12,068 பேர் தேர்வு எழுதவில்லை. 
இதைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி 4 மாவட்டங்களில் 8 மையங்களில் நடைபெற்று அண்மையில் முடிவடைந்தது.
அதில் இளநிலை பாடப்பிரிவில் 4,8796 பேரும், முதுநிலை பாடப்பிரிவில் 7,437 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 941 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த பருவத் தேர்வைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மதிப்பெண் பட்டில்கள் அனைத்தும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். 
மறு மதிப்பீடு செய்ய விரும்புவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் இணையதளம் வழியாக அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.