சென்னை: பள்ளி மாணவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டால், இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் விபத்துகளில் உயிரிழந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதற்கான, அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் நேற்று பிறப்பித்தார்.

அதன் விபரம்: தமிழகத்தில், 37 ஆயிரத்து, 201 அரசு பள்ளி களும், 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. 
ஏற்பாடுகள் : இவற்றில், அரசு பள்ளி களில், 55.73 லட்சம் மாணவர்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 29.52 லட்சம் மாணவர்களும் படிக்கின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து விட்டு, பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்பாராத விபத்துகளில், மாணவர்கள் சிக்கி, உயிர் சேதமோ, காயமோ ஏற்படுவதும் நடக்கிறது. அவ்வாறு பாதிக்கப்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதன்படி, மாணவர் மரணமடைந்தால், ஒரு லட்சம் ரூபாய்; பலத்த காயமுற்றால், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறிய காயம் ஏற்பட்டால், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக, அரசின் சார்பில், பள்ளிக்கல்வித் துறை வழியாக வழங்கப்படும்.
விடுமுறை நாட்கள் : மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போதும், கல்வி சுற்றுலா செல்லும் போதும் ஏற்படும் விபத்து; நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட் கிராஸ், சாரணர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றின் முகாம் அல்லது பேரணி யால் ஏற்படும் விபத்துக்களுக்கும், இழப்பீடு கிடைக்கும். விளையாட்டு போட்டிகளால் ஏற்படும் விபத்து; மின்கசிவு, விஷ பூச்சி தாக்குதல் மற்றும் ஆய்வக விபத்து; விடுமுறை நாட்களில் நீர்நிலைகளுக்கு மாணவர்கள் செல்லும் போது ஏற்படும் விபத்து, போன்றவற்றிற்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.