புதுடில்லி: ''இணையதளம் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம் செய்யும் வசதி, வரும் ஜூனில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத் கூறினார்.

அவசியம் இல்லை
தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:'ஓட்டர்ஸ் ஏரோநெட்' அப்ளிகேஷன் என்ற புதிய தொழில்நுட்ப வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த வசதி மூலம், இதுவரை, 22 மாநிலங்களின்வாக்காளர் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதன்பின், அந்த மாநிலங்களின்வாக்காளர் விபரங்கள் இணைக்கப்படும்.புதிதாக வாக்காளர்பட்டியலில், தங்கள் பெயரை இணைக்க விரும்புவோர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை, இணையதளம் வாயிலாக, இந்த அப்ளிகேஷனில் சென்று, மேற்கொள்ள முடியும்.
வேறு மாநிலங்களுக்கு செல்வோர், முகவரி மாற்றத்துக்காக தேர்தல்அலுவலகம் அல்லது ஓட்டுச் சாவடிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
'ஒன் டைம் பாஸ்வேர்டு'
இந்த அப்ளிகேஷனில் சென்று, வாக்காளர்கள், தங்கள் பெயர், முகவரி விபரங்களை அளித்து, மொபைல் போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' என்ற, ஓ.டி.பி., எண் வரும்.அதை, அப்ளிகேஷனில் டைப் செய்து சமர்ப்பித்தால், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும் அல்லது முகவரி மாற்றம் பதிவாகும். 
வரும் ஜூனில், நாடு முழுவதும் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கூறினார்.