புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.

தமிழகத்தில் மாநில கல்வி வாரியத்தின் கீழ் 1,6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் வரும் 2018-19 கல்வியாண்டில் மாற்றியமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதோடு இதற்கான பாடத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்களை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்புக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடநூல்களின் முதல்பாகம் தயாரிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து குறுந்தகடு வடிவில் தயாராகி உள்ளது. இந்த குறுந்தகட்டை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதனிடம் அச்சிடும் பணிக்காக அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை வழங்கினார். 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'மத்திய அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் புதிய பாடத்திட்டங்கள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பல்வேறு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டத்தை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
இந்த நிகழ்ச்சி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.