திருப்பத்துார்:தலைமையாசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த பள்ளியில் நேற்று, மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

வேலுார் மாவட்டம், திருப்பத்துார் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர், பாபுவை, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவர் ஒருவர், 5ம் தேதி கத்தியால் குத்தினார். 
படுகாயமடைந்த பாபு, வேலுார் திருமலைக்கோடி நாராயணி மருத்துவமனையில், சிகிச்சை பெறுகிறார். கத்தியால் குத்திய மாணவர், 
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படி, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில், மாவட்ட கலெக்டர், ராமனிடம் மனு அளித்தனர். ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மார்ஸ் உத்தரவிட்டார்.
இதன்படி, நேற்று அந்த பள்ளியில், 10 - பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி உளவியல் நிபுணர், சிவன் தலைமையில், கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மார்ஸ் கூறுகையில், ''மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், அனைத்து மாணவ - மாணவியருக்கும் உளவியல் ரீதியாக, கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, 10 - பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது,'' என்றார்.