பிளஸ் 1 பொதுத்தேர்வு கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். 

பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்குப் பிறகு பிரதான பாடங்களில் முதல் தேர்வாக கணிதத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்த வினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்த மாணவர்கள், பெர்னார்ட், பிரபு, ஆனந்தி உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறியது:- ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்புக்கு கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் எங்களுக்கும் (பிளஸ் 1) வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்தளவுக்கு கடினமான கேள்விகள் இடம்பெறும் என நினைக்கவில்லை. வினாத்தாளின் முதல் மூன்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபோதே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் 'சென்டம்' பெறவும், தேர்ச்சிக்கும் பெரிதும் உதவும் ஒரு மதிப்பெண் வினாக்கள் அந்தளவுக்கு கடினமாக இருந்தன. 
100-க்கு 70 பெறுவதே கடினம்: மொத்தம் உள்ள 47 வினாக்களில் 14 வினாக்கள் மட்டுமே பாடப்பகுதிக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் நன்கு யோசித்து பதிலளிக்கக் கூடிய அளவிலும், இதுவரை காலாண்டு, அரையாண்டு உள்பட எந்தத்தேர்வுகளில் இடம் பெற வினாக்கள் தற்போது இடம் பெற்றிருந்தன. கணிதத்தில்
100-க்கு 95-க்கும் மேல் பெற வேண்டும் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் இந்த வினாத்தாளில் 100-க்கு 70 மதிப்பெண் கிடைப்பதே கடினம்தான் என வருத்தத்துடன் தெரிவித்தேன். 
சிபிஎஸ்இ வினாத்தாள் போன்று...இது குறித்து கணித ஆசிரியர்கள் கூறுகையில், சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மிகவும் கடினமாகவே இருந்திருக்கும். இதில் முழு மதிப்பெண் பெறுவது சற்று சிரமம்தான். ஏனெனில் பெரும்பாலான கணக்குகள் சிபிஎஸ்இ வினாத்தாள் போன்று சிந்தித்து பதிலளிக்கக் கூடிய அளவிலேயே இடம் பெற்றிருந்தன. ஆனால், கணித வினாத்தாள் அப்படித்தான் இருக்க வேண்டும்.
பொறியியல் படிப்புக்கான அடிப்படை பிளஸ் 1 கணித பாடம் தான். பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படாமல் இருந்ததால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதனால் பல தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல்தான் பிளஸ் 1 பாடங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். கணக்குகளை நன்கு கவனித்து அதுதொடர்பாக சில பயிற்சிகளை மேற்கொண்டிருந்தால் எந்த முறையில் கணக்குகள் இடம் பெற்றிருந்தாலும் மாணவர்களால் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்றனர்.