பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில், பொதுத் தேர்வுக்கான குறுகிய கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியக் கவனக் குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

பொருளியல்
உயர் மதிப்பெண்களுக்கு
ஒரு மதிப்பெண் பகுதியைப் பொறுத்தவரை, பாடத்துக்கு 20 என மொத்தம் 240 வினாக்கள் பாடநூலின் பின்பகுதியில் இடம்பெறும். இவற்றிலிருந்து வினாத்தாளில் மொத்தமுள்ள 50 ஒரு மதிப்பெண் வினாக்களில் 48-க்கு விடையளிக்க முடியும்.
3 மதிப்பெண்களைப் பொறுத்தவரை 2,5,6,7 ஆகிய பாடங்களைப் படித்தாலே, 10 வினாக்களில் 8-ஐ எழுதிவிடலாம். 8-ம் பாடத்தில் 3 மதிப்பெண் கேட்கப்படுவதில்லை என்பதால், மீதமுள்ள 2 கேள்விகளை, ஏனைய பாடங்களில் இருந்து தயார் செய்ய வேண்டும். அவற்றையும் வழக்கமாகக் கேட்கப்படும் முக்கிய வினாக்களில் இருந்தே தொகுத்துப் படிக்கலாம்.
10 மதிப்பெண் பகுதியில் 7,10,12 ஆகிய 3 பாடங்களைப் படித்தாலே கேட்கப்பட்ட 6 வினாக்களுக்கும் பதிலளித்துவிடலாம். 10 மதிப்பெண் பகுதியில் வினாவுக்குத் துணைத் தலைப்புகள் எழுதி அவற்றின் கீழ் தெரிந்த குறிப்புகளை எழுதினாலே பாதி மதிப்பெண் கிடைத்துவிடும். இது தவிர 2, 5, 6, 8 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படுகிறது. 1, 3, 4, 9, 11 ஆகிய பாடங்களில் 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படுவதில்லை.
20 மதிப்பெண் பகுதி வினாக்கள் 6-ல் 3 என்ற அடிப்படையில் சாய்ஸ் உடன் அமைந்திருக்கும். இந்த 6 கேள்விகளும் 1, 3, 4, 8, 9, 11 ஆகிய 6 பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்பதால், இவற்றில் எளிதான நான்கு பாடங்களை மாணவர் தேர்வுசெய்து படிக்கலாம்.
இந்த நான்கில் இருந்தும் நன்கு தெரிந்த ஏதேனும் 3 வினாக்களுக்குப் பதில் அளிக்கலாம். அதிலும் பத்தி பத்தியாக விடையுள்ள கேள்விகளைவிடக் கணிதம் போல பல படிநிலைகளில் மதிப்பெண் வழங்கும் பதில்கள் உள்ள வினாக்களைத் தேர்வு செய்யலாம். வரைபடம், விளக்கம், அட்டவணை ஆகியவை உள்ள வினாக்கள் இந்த வகையில் சேரும். பொருள் / இலக்கணம், எடுகோள்கள், விளக்கம், வரைபடம், வரைபட விளக்கம் என உரிய படிநிலைகளில் விடையளித்து, அவற்றுக்கான முழு மதிப்பெண்களைப் பெறலாம். எங்கேனும் தவறானாலும், அந்தப் படிநிலைக்குரிய மதிப்பெண் மட்டுமே குறையும்.
தேர்ச்சி எளிது
மேலே தரப்பட்ட குறிப்புகளின்படி ஒரு மதிப்பெண் பகுதியில் ஓரிரு வினாக்கள் தவிர்த்த பெரும்பாலானவற்றைப் பாடநூல் வினாக்களில் இருந்தே பெறலாம். 2,5,6,7 பாடங்களின் 3 மதிப்பெண்களை மட்டுமே படித்து 8 வினாக்களுக்குப் பதிலளிக்கலாம். 10 மதிப்பெண் வினாக்களில் துணைத்தலைப்புகளை எழுதி அவற்றின் கீழ் ஓரிரு கருத்துகளை எழுதினாலே அதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணாகத் தலா 3 பெறலாம். 20 மதிப்பெண்களில் எடுகோள்கள் தெரிந்திருந்தாலே தலா 4 மதிப்பெண்கள் உறுதி. கூடுதலாக அட்டவணை, வரைபடம், விளக்கம் ஆகியவற்றை எழுதினால் பாதி மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இந்த வழிமுறைகளில் மாணவர்கள் 100 மதிப்பெண்களைப் பெற முடியும்.
கணக்குப் பதிவியல்
உயர் மதிப்பெண்களுக்கு
பாடநூலின் வினாக்களுடன், கடைசி 5 வருட வினாத்தாள்களிலும் திருப்புதல் மேற்கொண்டால் உயர் மதிப்பெண்களைப் பெறலாம். 1 மதிப்பெண் பகுதியில் விடையளிக்க வேண்டிய 30-ல் 28 வினாக்கள் முந்தைய 5 ஆண்டு வினாத்தாள்களில் இருந்தே பெற்றுவிடலாம். 2 மட்டுமே பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படுகிறது.

ஆர். செந்தில்குமார்
5 மதிப்பெண்கள் பிரிவில் தலா 7 தியரி வினாக்கள் உண்டு. ஏனைய கணக்குக் கேள்விகள் வினா எண் 38 முதல் 44 வரையில் பின்வரும் தயாரிப்பு முறையைப் பின்பற்றலாம். பாட எண் 1-ல் ‘சரிக்கட்டுதல்’ தொடர்பான கணக்குகள். பாட எண் 2-ல் ‘விடுபட்ட தகவல் அல்லது லாப நட்டம் காணல். இதுபோலவே 3-ல் ‘தேய்மான விகிதம் காணல், 4-ல் ‘விகிதம் கணக்கிடல், 5-ல் ‘ஒரு மாத ரொக்க இருப்பைக் காணுதல், 6-ல் ‘நற்பெயர் / எடுப்பு மீது வட்டி’, 7-ல் ‘பங்கு வெளியிடலில் முனைமம் / தள்ளுபடி’ தொடர்பான கணக்குகள்.
12 மதிப்பெண்கள் பிரிவின் 8 வினாக்களில் 3 தியரியாகவும், 5 கணக்காகவும் கேட்கப்படும். இவற்றிலிருந்து சாய்ஸில் 5 கேள்விகள் பதிலளிக்க வேண்டும். வி.எண்.45 கட்டாய வினா. வி.எண்கள் 46, 47, 48 தியரி என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்து, திட்டவட்டமான பாயிண்ட்களாக விடையளித்து முழு மதிப்பெண்களைப் பெறலாம். இந்த 4 வினாக்கள் போக ஏனையவற்றில், கணக்கு வினாவான வி.எண்.52-ஐத் தெரிவு செய்து அதற்காகப் பாட எண் 7-ன் கணக்குகளில் பயிற்சி பெறலாம்.
20 மதிப்பெண்கள் பிரிவில், கட்டாய வினாவாக வி.எண் 53 கணக்குக் கேள்வியாக அமையும். 5-ல் 3 என்றளவில் சாய்ஸ் கேள்விகளை எழுத வேண்டுமென்பதால், ஏனைய இரண்டு வினாக்களாக வி.எண்கள் 54, 56 ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.
இதில் வி.எண் 54-க்கு பாட எண் 1-லிருந்து ‘இறுதி கணக்கு’, வி.எண் 56-க்கு பாட எண் 5-லிருந்து ‘3 மாத இருப்பைக் காணுதல்’ ஆகிய கணக்குகளில் பயிற்சி மேற்கொள்ளலாம். இதிலும் வி.எண் 54-யை கடினமாக உணர்பவர்கள், மாற்று ஏற்பாடாக வி.எண் 55-க்காக பாட எண் 4-ன் ‘விகித ஆய்வு’ தலைப்பிலிருந்து உரியப் பயிற்சிகளைப் பெறலாம்.

சா. உதயகுமார்
தேர்ச்சி எளிது
பாட எண் 2-ல் ‘தேய்மானக் கணக்கு, பாட எண் 5-ல் ’ரொக்கத் திட்டப் பட்டியல்’, பாட எண் 6-ல் ‘கூட்டாண்மை’ ஆகிய தலைப்புகளில் தலா ஒரு 5, 12 மதிப்பெண் வினாக்கள் என மொத்தம் 51 மதிப்பெண்கள் எளிதில் பெறலாம். இவற்றோடு ஒரு மதிப்பெண் பகுதியை மட்டுமே கவனத்தில் கொண்டு 25 மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் 76 மதிப்பெண்கள் பெறலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற கல்வி அமுதுவின் இனிய வாழ்த்துக்கள்...

பாடக்குறிப்புகளை வழங்கியோர்:
ஆர். செந்தில்குமார், முதுநிலை ஆசிரியர் (பொருளியல்), பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.
சா.உதயகுமார். முதுகலை ஆசிரியர் (கணக்குப் பதிவியல்), அரசு மேல்நிலைப் பள்ளி, கருங்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்.