சிவகங்கை: 'பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது' என ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:பொ.ஆகாஷ் ராஜலிங்கம், சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை: 'ஏ' டைப் கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 1, 18 மற்றும் 26 வது கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்களில் 34 மற்றும் 41 வது கேள்விகள் நேரடியாக இல்லாமல் மறைமுக கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்தோர் மட்டுமே 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இ, ஈ பிரிவை எழுத முடியும். மற்றபடி 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. இந்தஆண்டு 'சென்டம்' எடுப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.ஜி.பிரியதர்ஷினி, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி, காரைக்குடி: ஒரு மதிப்பெண் வினாக்களில் 6 கேள்விகள் சிந்தித்து எழுதும்படி இருந்தது. இது இதுவரை இல்லாத வினாத்தாள் என்றே சொல்லலாம். மூன்று மதிப்பெண் வினாக்களை குழப்பமாக கேட்டிருந்தனர். நன்றாக படித்தோர் மட்டுமே 21 வினாக்களையும் எழுத முடியும். கட்டாய வினாக்கள் எளிமை. 200 மதிப்பெண்கள் பெறுவது கடினம். தேர்ச்சி பெறுவது எளிது.எம்.சைவகுமார், எஸ்.எம்.எஸ்., ஆண்கள் மேல்நிலை பள்ளி, காரைக்குடி: பெரும்பாலான கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது ஏமாற்றம் அளிக்கிறது. மூன்று மதிப்பெண் வினாக்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கேட்கப்பட்டதால் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் மிக எளிமை. சராசரி மாணவரும் ஏழு வினாக்களையும் எழுத முடியும். பத்து மதிப்பெண் வினாவில் முதல் மூன்று எளிதாக இருந்தது. நான்காவது கேள்வி யோசித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது.ஆர்.பால்ராஜ், ஆசிரியர், கே.ஆர். மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை: 30 ஒரு மதிப்பெண் வினாக்களில் 17 கேள்விகள் புத்தகத்தில் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அதில் சில கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தன. கடந்த ஆண்டு கேள்வித்தாளை விட சற்று மாறுபாடு இருந்தது. புதிய கேள்விகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்களில் 34, 36 மற்றும் 51 வது கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தன. ஐந்து, பத்து மதிப்பெண் வினாக்கள் எளிது. தேர்ச்சி பெறுவது எளிது: 'சென்டம்' எடுப்பது கஷ்டம்.