டெல்லி: 2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதப்பாட கேள்வித் தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த 2 பாடங்களுக்கும் சிபிஎஸ்இ மறுதேர்வு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 2 பொருளாதார பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்தது ஆனால் சிபிஎஸ்இ இதனை மறுத்து வந்தது.

இதே போன்று இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு கணித பாடத் தேர்வுக்கான கேள்வித் தாள் நேற்று இரவே வெளியானது. இன்று தேர்வு நடந்து முடிந்த நிலையில் அந்த வினாத்தாளை நேற்று இரவு வெளியான கேள்வித்தாளுடன் ஒப்பிட்டு பார்த்த போது இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிபிஎஸ்இ 2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் ஆசிரியர் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர். இந்த 2 பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ம் வகுப்பு சமூக அறிவியல், 12ம் வகுப்பு பயாலஜி பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் முன்கூட்டியே வெளியானதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.