ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் நான்கு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் (டிபிஐ), கடந்த 2013, 2017-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு எழுதியோர், ஓவியம், கணினி, தையல் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதியவர்கள் என 4 தனித் தனி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை (மார்ச் 26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இது குறித்து 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியது: 2013-இல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 40,000 பேருக்கு நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி ஆணை வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த ஆசிரியர் பட்டியல் வெளியிடும்போது எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால்தான் கல்வித் தரம் மேம்படும். பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகளைக் காட்டிலும் ஆசிரியர்கள் முக்கியம் என்பதை பள்ளிக் கல்வித்துறை உணர்ந்து எங்களுக்கு பணி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றனர். 
2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறியது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை தகுதிச் சான்றிதழ் வழங்கவில்லை. தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. அதேபோன்று தகுதித்தேர்வு தாள் 1-ஐ எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவில்லை. தமிழகத்தில் வட மாவட்டங்களைக் காட்டிலும் தென் மாவட்டங்களில் 4,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதை பள்ளிக் கல்வித்துறை சீர்செய்ய வேண்டும் என்றனர்.
இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணி வழங்கக் கோரியும், சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்கள் அதற்கான முடிவுகளை வெளியிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு ஒரே நேரத்தில் நான்கு குழுக்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது, சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை மே இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.