எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள், எமிஸ் இணையதளம் மூலமாக, கடந்த 2012ல் இருந்துதிரட்டப்படுகிறது. இதை ஒருங்கிணைத்து, ஆதார் எண் சேர்க்கும் பணிகள், 99 சதவீதம் முடிந்தது. மேலும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, மாணவர்களுக்கு அடையாளஅட்டை உருவாக்கும் வகையில், பிரத்யேக செயலி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், மாணவர்களின் புகைப்படத்தை பதிவேற்றி, பெயர், வகுப்பு, பிரிவு, ரத்த வகை, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை வடிவமைக்கப்படும். இதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்குவழங்கப்பட்டுள்ளன.வரும் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சீருடையும் மாறுவதால், அடையாள அட்டை வழங்கினால், அரசுப்பள்ளி மாணவர்களின் மீதான புறத்தோற்ற பிம்பம் மாறும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

கல்வியாளர்கள் சிலர் கூறுகையில்,'பள்ளிக்கல்வித்துறையில், வரும் கல்வியாண்டில் தான், பல அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டம் மாறுவதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, 'டேப்லெட்' மூலம், வகுப்பு நடத்தப்பட உள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட உள்ளதால், அரசுப்பள்ளிகள் மீதானநம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதோடு, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் நாளிலே, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதற்கான முன் ஆயத்த பணிகள் துவங்க, இயக்குனர் உத்தரவிட வேண்டும்' என்றனர்.