கணிதம் என்றாலே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நடைமுறையில் அதைப் பெறத் தீவிரமான தயாரிப்பும் உழைப்பும் அவசியம். இதைக் கவனத்தில் கொண்டு கணிதப் பாடத்துக்கான கவனக் குறிப்புகளைப் பார்ப்போம்.

அதிகம் நேரிடும் தவறுகள்
     
வினா எண்ணை எழுதாமல் விடுதல் அல்லது தவறாக எழுதுதல், செய்முறை வடிவியலில் உதவிப் படம் வரைய மறப்பது, புள்ளிகளுக்குப் பெயரிடாதது, அளவுகளை எழுதாதது, தொடுகோடு வரைதலில் கொடுக்கப்பட்டுள்ள அளவு ஆரமா விட்டமா எனக் கவனிக்காதது, கிராஃப் பகுதியில் அளவுத்திட்டம் எழுதாதது அல்லது தவறாக மாற்றி எழுதுவது, விடைகளை எடுத்து எழுதாதது போன்ற தவறுகள் அவசரத்தாலும், கவனக் குறைவாலும் அதிகம் நேரிடுகின்றன.
இவற்றுக்கு அடுத்தபடியாகச் சூத்திரங்கள் எழுதாமல் விடுதல், தேற்றங்கள், தேவைப்படும் வினாக்களுக்குப் படம் வரையாமல் விடுதல், கணக்கைச் சரியாகத் தீர்த்தாலும் விடையைத் தனியாக எடுத்து எழுதும்போது தவறிழைத்தல், விடைக்கு உரிய அலகை எழுத மறப்பது, கணித அடிப்படைச் செயல்பாடுகளில் +, - உள்ளிட்ட குறிகளை மாற்றி எழுதுவது போன்ற தவறுகள் நடக்கின்றன.
கட்டாய வினாக்கள் கவனம்
கட்டாய வினாக்களில் (வினா எண்கள் 30, 45) கணிசமான மாணவர்கள் மதிப்பெண் இழக்கிறார்கள். எனவே, இந்த வினாக்களுக்கு மாணவர்கள் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட விளக்கப் படம், இதுவரையிலான பொதுத் தேர்வுகளில் கட்டாய வினாக்கள் பகுதியில் இடம்பெற்ற 2, 5 மதிப்பெண் வினாக்களைப் பாட வாரியாக அறிய உதவும். இதிலிருந்து 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்தே அதிக வினாக்கள் இடம்பெருவதையும், 5 மதிப்பெண் கட்டாய வினாவைப் பொறுத்தவரை 3, 5, 8 ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பாடங்கள் என்பதையும் அறியலாம். இப்பாடங்களில் சிறப்புக் கவனம் செலுத்துவதன் மூலம் முழு மதிப்பெண்களை உறுதிசெய்யலாம்.
நூற்றுக்கு நூறு
சதம் அடிக்க விரும்பும் மாணவர்கள், வேகமாகவும் அதேநேரம் தவறுகளுக்கு இடமின்றித் துல்லியமாகவும் கணக்குகளைத் தீர்க்கப் பயிற்சி பெற வேண்டும். இவற்றுடன் நேர மேலாண்மையைச் சரியாகப் பின்பற்ற, தேர்வின் தொடக்கத்தில் வழங்கப்படும் 10 நிமிடங்களைச் சரியாகப் பயன்படுத்திப் பழக வேண்டும்.
இந்த வருடம் அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில், ஒரு மதிப்பெண் வினாக்களிலும் ‘தயாரிக்கப்பட்ட வினாக்கள்’ (created questions) இடம்பெற்றன. எனவே, பொதுத்தேர்வுக்கு அவற்றைக் குறிவைத்துப் போதிய தயாரிப்பை மேற்கொள்ளலாம். சூத்திரங்களை மனனம் செய்வதற்கு முன் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வது, இந்த வகை வினாக்களை எதிர்கொள்ள உதவும்.
2, 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளின் பொதுத்தேர்வு, திருப்புதல் தேர்வு வினாத்தாள்களில் இடம்பெற்ற கட்டாய வினாக்கள், தயாரிக்கப்பட்ட வினாக்களில் கூடுதல் பயிற்சிகள் பெறலாம்.
விடைகளை உரிய படிநிலைகளுடன் தீர்க்கப் பழக வேண்டும். கொடுக்கப்பட்ட விவரங்கள், உரிய சூத்திரம், அதில் மதிப்புகளைப் பிரதியிடல், கணக்கீடுகளுக்கான படிகளை முறையாகச் செய்தல், விடையை உரிய அலகுடன் எடுத்து எழுதுதல் ஆகிய படிநிலைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முழு மதிப்பெண்களை பெற உதவும்.
75 மதிப்பெண்களுக்குக் குறையாது பெற
சதம் என்பதைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவதை இலக்காகக் கொண்ட மாணவர்கள்தான் அதிகம் பேர். இவர்களுக்காக, 75-க்குக் குறையாது மதிப்பெண்கள் பெறுவது குறித்துப் பார்ப்போம்.
2 மதிப்பெண் பகுதியில் கவனத்துக்கு உரியவை: பாடங்கள் 1, 4, 12 அனைத்துப் பயிற்சிகளும். பாடம் 3 -தொகுமுறை வகுத்தல், மீ.பொ.வ., மீ.பொ.ம காணுதல், மூலங்களின் தன்மை. பாடம் 5 - பயிற்சி 5.1. பாடம் 6 - தேல்ஸ் தேற்றம், இருசமவெட்டி தேற்றத்தைப் பயன்படுத்திச் செய்யும் வினாக்கள், நாண்கள் வெட்டிக்கொள்ளுதல். பாடம் 7 - பயிற்சி 7.1., பாடம் 8 -பயிற்சி 8.1, பாடம் 11 - வீச்சு, வீச்சுக் கெழு, மாறுபாட்டுக் கெழு.
5 மதிப்பெண் பகுதி: பாடங்கள் 1, 4, 12 - அனைத்துப் பயிற்சிகளும். பாடம் 2 - பயிற்சி 2.6. பாடம் 3 - காரணிப்படுத்தல், மீ.பொ.வ காணுதல், வர்க்கமூலம் காணுதல். பாடம் 5 - பயிற்சி 5.2. பாடம் 6 - மூன்று தேற்றங்கள். பாடம் 8 -பயிற்சி 8.3.
ஒரு மதிப்பெண், செய்முறை வடிவியல், வரைபடம் பகுதிகளுக்கு அடுத்துவரும் தலைப்பின் கீழான வழிகாட்டுதல்களையே பின்பற்றலாம்.

தேர்ச்சி எளிது
தேர்ச்சி பெறுவதுடன் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களைச் சுலபமாக எடுக்க:
செய்முறை வடிவியலில் அதிக வினாக்கள், வகைகள் காரணமாக வட்ட நாற்கரம் வரைவதில் தவறு ஏற்படுகிறது. எனவே தொடுகோடு, முக்கோணம் வரைதல் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து பயிற்சி எடுத்தல் நல்லது. இந்த இரண்டும் கேட்கப்பட்டிருப்பின், தவறுகளுக்கு வாய்ப்புள்ள முக்கோணத்துக்கு பதில், தொடுகோடு வரைதலுக்கு முன்னுரிமை தரலாம். வரைபடம் வரைதலில், சிறப்பு வரைபடங்களில் இடம்பெற்றுள்ள 9 வினாக்களில் மட்டும் கவனம் செலுத்தினால்போதும்.
புத்தகத்தில் மொத்தமுள்ள 205 ஒரு மதிப்பெண் வினாக்களில், 2,3,5,6, 7 ஆகிய பாடங்களின் 108 வினாக்களைக் குறிவைத்துப் படித்தாலே இப்பாடங்களில் இருந்து கேட்கப்படும் தலா 2 என மொத்தம் 10 வினாக்களுக்குப் பதிலளிக்க முடியும்.
எளிய பாடங்களான 1, 4, 12 ஆகியவற்றின் 2, 5 மதிப்பெண் வினாக்களில் கவனம் செலுத்தி, அவற்றுக்கான மதிப்பெண்களைப் பெறலாம். இவற்றுடன் 8,11 ஆகிய பாடங்களின் சூத்திரங்களை மட்டுமாவது படித்துச் செல்லலாம். இவற்றுடன் தேற்றங்கள், அவற்றின் வேறு பெயர்கள் மற்றும் உரிய படங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கடினமான பாடம் என முழுவதுமாகப் பாடப் பகுதிகளைத் தவிர்க்காமல், சூத்திரங்கள் அடிப்படையில் முக்கிய கேள்விகளைத் தேர்வு செய்தேனும் படிக்கலாம். உதாரணமாகப் புள்ளியலில் வீச்சு, வீச்சுக்கெழு, மாறுபாட்டுக் கெழு, திட்டவிலக்கம் மற்றும் விலக்கவர்க்கச் சராசரி ஆகியவற்றுக்கான சூத்திரங்களை மட்டும் எழுதியே எளிதான முறையில் உரிய மதிப்பெண் பெறலாம். .

தேர்வில் அதிக மதிப்பெண் பெற கல்வி அமுதுவின் இனிய வாழ்த்துக்கள்..
பாடக்குறிப்புகள் வழங்கியவர்: ஜெ.செந்தில்செல்வன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), அரசு மேல்நிலைப்பள்ளி, மாங்குடி, சிவகங்கை மாவட்டம்.