சென்னை: 'அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 'ரெடி ரெக்கோனர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்கையேடு, நேற்று வெளியிடப்பட்டது.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 'அம்மா கல்வியகம்' துவக்கப்பட்டது. இது, இலவச கல்வி இணையதளம். இதில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு, கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்காக, இலவசமாக, தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும், 1,500 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.தற்போது புதிதாக, மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, இலவச கையேடு தயார் செய்துள்ளது. இதன் வௌியீட்டு விழா மற்றும் அம்மா கல்வியகம் ஓராண்டு நிறைவு விழா, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி, இலவச கையேடை வெளியிட, மாணவ, மாணவியர் பெற்றனர்.அம்மா கல்வியகம் பொறுப்பாளர், அஸ்பயர் சாமிநாதன் பேசுகையில், ''அம்மா கல்வியகத்தில், 18.34 லட்சம் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பயன் பெற்று வருகின்றனர். புதிதாக வெளியிடப்பட்ட கையேடு, 230 பக்கங்கள் உடையது. இந்த கையேட்டை, அம்மா கல்வியகத்தின், www.ammakalviyagam.in என்ற இணையதளத்திலிருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என்றார்.***