'பல்கலை, கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில், விருப்பப்பாட தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்'
என, பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.பல்கலை, கல்லுாரிகளில், துறைகளுக்குள்ளும், பிற துறைகளிலும், விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கு, பாடங்களின் தரம், முக்கியத்துவம் அடிப்படையில், மதிப்பெண் பட்டியலில் புள்ளிகள் சேர்க்கப்படும். இந்நிலையில், விருப்பப்பாடத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், களப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இரு புள்ளிகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கோடை விடுமுறை முதல், இதை செயல்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறையில், கிராமம் மற்றும் குடிசைப் பகுதிகளில், துாய்மைப் பணியிலும், களப்பணியிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இதற்கான பணிகளை, கல்லுாரி, பல்கலை நிர்வாகங்கள் மேற்கொள்ளவும், மாணவர்களுக்கு தகவல்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.