தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சீருடைகளை மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான சீருடைகள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிக் கூடங்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடைகளை தேர்வு செய்துள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் வெவ்வேறு விதமான சீருடைகள் பயன்பாட்டில் உள்ளன. 
இந்நிலையை மாற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஒரே விதமான சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 9 , 10-ஆம் வகுப்பு படிப்போருக்கு ஒரே விதமான சீருடையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வித்தியாசமான மற்றொரு வகையான சீருடையும் மாற்றி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டையும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிற மேல்கோட் அணிய வேண்டும். 
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கரு நீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டையும் அணி வேண்டும். மாணவிகள் கூடுதலாக கருநீலக் கோடிட்ட மேல் கோட்டும் அணிய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. 
மேலும் 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை சொந்த செலவில் சீருடை வாங்கிக்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.