தமிழகத்தில், 2007ல், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டது. 2011 முதல், 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், 100 சேனல்களை அளித்து வருகிறது.
2014 முதல், சென்னை உட்பட நான்கு மாநகரங்களில், டிஜிட்டல் முறையில், கேபிள், 'டிவி' சேவை தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும், 22 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கேபிள், 'டிவி' சேவை, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பது, மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர், குமரகுருபரன் கூறியதாவது:தமிழகத்தில், 294 தாலுகாக்கள் உள்ளன; அவற்றில், 130ல் மட்டுமே, அரசு கேபிள், 'டிவி' சேவை கிடைக்கிறது. அனைத்து தாலுகாக்களிலும் சேவைகளை வழங்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில்டெல், பி.எஸ்.என்.எல்., மற்றும் வோடாபோன் நிறுவனங்களுடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைவருக்கும், குறைந்த கட்டணத்தில், தரமான சேவை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த மாத இறுதிக்குள், 24 லட்சம், செட் -டாப் பாக்ஸ்கள், வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உரிமம் ரத்தாகும் : அரசு கேபிள், 'டிவி' சேவையில், 125 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, 200 சேனல்கள்; 175 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., செலுத்தி, 300 சேனல்கள் பெறும் வசதிகள் உள்ளன. அரசு நிர்ணயித்த, இந்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கும், ஆப்பரேட்டர்கள் குறித்து, புகார்கள் எழுந்தால், அவர்களின் கேபிள், 'டிவி' உரிமம் ரத்து செய்யப்படும் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் எச்சரித்துள்ளது.