கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் ஜப்பான் செல்லும் வாய்ப்பை பெற்று, அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து அரசுப்பள்ளியில் பயின்று அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே, அந்நாட்டு அறிவியல் முன்னேற்றங்களைக் காணச் செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக மே மாதம் 12-19 தேதி வரை ஜப்பான் செல்லும் 6 மாணவர்கள் கொண்ட குழுவில், கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 பயிலும் ம.ஹரிஹரன் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். ஜப்பான் செல்லும் அந்த மாணவருக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.தமிழரசன் தலைமை ஏற்றார் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கலியபெருமாள் பங்கேற்றார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாணவர் ஹரிஹரனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் பேசிய மாணவர் ஹரிஹரன், ``எனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் அவர்கள் என்னிடம் புதைந்துள்ள அறிவியல் திறன்களை கடந்த ஆறு ஆண்டு காலமாக வெளிக்கொணரும் விதத்தில், எனக்கு வழிகாட்டியதன் மூலம், நான் கண்டுபிடித்த 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றான, சூழலியல் காக்கும் கழிவறை என்ற கண்டுபிடிப்பிற்காக, இன்ஸ்பயர் விருதில் தங்கம் வென்றேன். அதன் மூலமாகத்தான் நான் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளேன். சக இளம் விஞ்ஞானி மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால், என்னைப்போல் சாதிக்கலாம்" என மனம் உருகிப் பேசி நன்றி கூறினார்.