பள்ளிப் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது புத்தகங்களின் விலை 20 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.


கோடை விடுமுறைக்குப் பின் வரும் ஜுன் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிக்ள் திறக்கப்பட உள்ளன. 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற வகுப்புகளுக்கு பழைய பாடப் புத்தகங்களே பயிற்றுவிக்கப்பட உள்ளன.


இதையடுத்து புதிய பாடத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படும் 1,6,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலையை 20 சதவீத அளவுக்கு உயர்த்த தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிப் புத்தகங்களின் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என கூறினார்.

தற்போது அச்சிடப்பட்டு வரும் பாடப் புத்தகங்கள், அதிக அளவில் வண்ணப் படங்களை சேர்ப்பது, புத்தகத்தின் முதல் மற்றும் பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பிச் செலவு அதிகரித்துள்ளது என்றும் இதனால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.