``சம ஊதியம் வழங்கப்படுவதற்கான ஆணையை வாங்கிய பிறகே, போராட்டத்தை முடிப்போம்" எனும் உறுதியான வார்த்தைகளோடு பேசத் தொடங்குகிறார் ஆசிரியை இந்துமதி. புதுக்கோட்டை, கறம்பங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாப்பாபட்டியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்றிலிருந்து ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவரோடு பேசினோம்.


``2009-ம் ஆண்டுக்குப் பின் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே ரொம்பவும் வித்தியாசம் இருக்கிறது. ஆறாவது ஊதிய கமிஷனில் எங்களின் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அது சரிசெய்யப்படாமலேயே ஏழாவது ஊதிய கமிஷன் அறிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாமல், பலர் ஆறாவது ஊதியக் கமிஷன் அறிவித்த ஊதியம் மட்டுமே பெற்றுவருகிறார்கள். அவர்களின் நானும் ஒருவர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு பலமுறை எங்களின் கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளோம்.


நேற்று காலை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தின் முன், எங்களின் சம வேலைக்குச் சம ஊதியம் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் செய்தோம். சுமார் 7,000 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். எங்களைக் கைது செய்த போலீஸார் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்துவைத்தனர். நாங்கள் எங்களின் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினோம்.
மாலையில், 'நீங்கள் கலைந்துசெல்லலாம்' எனப் போலீஸார் கூறினர். ஆனால், எங்கள் இயக்கத் தலைவர்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காமல் செல்ல மாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். எங்களில் பலர் உடல் அளவில் சோர்ந்துவிட்டனர். இருட்டத் தொடங்கியதும், 'இந்தப் பகுதி பாதுகாப்பானது அல்ல, உங்களுக்குப் போதுமான பாதுகாப்பு தர முடியாது' என்று போலீஸார் கூறி, எப்படியாவது கலைந்துசெல்ல முயற்சி செய்தனர். நாங்கள் உறுதியாக இருந்தோம். இதனால், இரவு எட்டு மணியளவில் அங்கிருந்த டாய்லெட்டில் தண்ணீரை நிறுத்திவிட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டதில் பெரும்பகுதியினர் பெண்கள். அதனால், ரொம்பவே சிரமப்பட்டனர். நாங்கள் எடுத்துவந்த போர்வையைப் போர்த்தி, அங்கேயே படுத்துவிட்டோம். ஆனால், போலீஸார் அடிக்கடி ஏதேதோ சொல்லியவாறே இருந்தனர். 'கலைந்து செல்லாவிட்டால், ரிமாண்ட் செய்யப்படுவீர்கள். வேலை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும், இந்த இடத்தில் காலையில் நாங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எல்லோரும் கோயம்பேடு போய்ட்டு காலையில் வாங்க.... இப்படிப் பல. அங்கிருக்கும் கேலரிகளையும் மூடிவிட்டனர்.நேற்றிலிருந்து ஆசிரியர்கள் மயங்கி விழுவது தொடங்கிவிட்டனர். இப்போது வரைக்கும் இருபத்தி ஐந்து பேர் மயங்கிவிட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல மூன்று ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், எங்கே அழைத்துச் செல்கின்றனர் என்பது தெரியவில்லை. இன்று காலையில் எல்லோரும் கேட்டதும் டாய்லெட்டில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். என்ன ஆனாலும் சரி, எங்களின் போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை நிச்சயம் தொடரும் என்பது சந்தேகமேயில்லை" என்கிறார் ஆசிரியை இந்துமதி.போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் சமூக ஊடகங்கள் வழியே பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் ஆசிரியை பா.பிரித்தீ, 'போராட்டக் களத்தில் குடிக்க தண்ணீர்கூடக் கிடைக்கவில்லை. அதைக்கூட உள்ள வர அனுமதிக்க மாட்டேங்கிறாங்க. ஶ்ரீபெரும்புதூர் பள்ளி ஆசிரியர் சிவகாமசுந்தரி மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே சிகிச்சைப் பெற்று மீண்டும் தற்போது போராட்டக் களத்துக்குத் திரும்பிவிட்டார் " என்கிறார்.

தொடரும் ஆசிரியர்களின் போராட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்ப வேண்டும்.